| ADDED : டிச 12, 2025 06:20 AM
வால்பாறை: வால்பாறையில், பழைய அங்கன்வாடி கட்டடத்தை இடித்து புதியதாக கட்டாமல், பழைய கட்டடத்துக்கு 'மேக்கப்' செய்யும் பணி நடப்பதால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வால்பாறை மலைப்பகுதியில், 43 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இந்த கல்வியாண்டில் இது வரை, 855 குழந்தைகள் அங்கன்வாடியில் சேர்ந்து ஆரம்ப கல்வி கற்கின்றனர். இதில், வெளிமாநிலத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் தமிழ் கற்கின்றனர். வால்பாறை எம்.ஜி.ஆர்.,நகரில் நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் அங்கன்வாடி மையம் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டது. இடியும் நிலையில் உள்ளதால் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளதாக கூறி, அங்கன்வாடி மையம் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. இந்நிலையில், அங்கன்வாடி மையம் புதியதாக கட்டும் பணி நகராட்சி சார்பில் நடக்கிறது. ஆனால், பழைய கட்டடம் இடிக்காமல் அதே சுவற்றை பயன்படுத்தி கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. இதனால், அங்கன்வாடி குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சியில், சமீப காலமாக வளர்ச்சிப்பணிகள் நடைபெறுவதில் குளறுபடி நடக்கிறது. பழைய கட்டடத்தை இடிக்காமலேயே 'மேக்கப்' போடும் பணியும் பல்வேறு இடங்களில் நடக்கிறது. அங்கன்வாடி கட்டடத்தின் உள் பகுதியில் உள்ள சுவற்றை இடிக்காமல், பழைய கற்களை கொண்டு, கட்டுமானப்பணிகள் நடக்கிறது. இதை நகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. மீண்டும் அங்கன்வாடி மையம் திறந்தாலும் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்படும். இவ்வாறு, கூறினர். நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறை எம்.ஜி.ஆர்.,நகரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அங்கன்வாடி கட்டடம் மிகவும் பழமையானது. இருப்பினும் கட்டடம் உறுதியாக உள்ளதால், உள்பகுதியில் மட்டும் சுவர் இடிக்காமல், 8.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. கட்டட உறுதி தன்மை உறுதி செய்த பிறகே பணி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. விரைவில் அங்கன்வாடி மையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்,' என்றனர்.