வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம், கோலாகலமாக நடந்தது.முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச தேர்த்திருவிழா துவங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும், சிறப்பு பூஜையும் திருவீதியுலாவும் நடந்தது.தைப்பூச தேர்த்திருவிழாவின், ஆறாம் நாளான நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு, கோபூஜையும், 5:30 மணிக்கு, நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜையும் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி, தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை, 7:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி இந்திர விமானத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காலை, 9:40 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. அதன்பின், கண்ணாடி மஞ்சத்தில் திருவீதியுலா வந்தனர்.மொய் பணமாக, 34,914 ரூபாய் வசூலானது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தைப்பூச திருவிழாவின் முக்கிய நாளான இன்று, 11:30 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.