| ADDED : பிப் 22, 2024 05:46 AM
கோவை: பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கோ கோ போட்டியில், தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு பள்ளி (டி.என்.ஜி.ஆர்.,) அணி, இரண்டாம் இடம் பிடித்தது.பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான குடியரசு தின கோ கோ போட்டி, புதுக்கோட்டையில் நடந்தது. இப்போட்டியில், மாவட்ட போட்டியில் முதல் இடம் பிடித்த அணிகள் பங்கேற்றன.கோவை மாவட்டம் சார்பில், டி.என்.ஜி.ஆர்., பள்ளி அணி மாணவர்கள், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்றனர். சிறப்பாக விளையாடிய மாணவர்கள் முதல் போட்டியில், நாமக்கல் அணியை 15 - 7 என்ற புள்ளிக்கணக்கிலும், 2வது போட்டியில் தஞ்சாவூர் அணியை 13 - 5 என்ற புள்ளிக்கணக்கிலும், அரையிறுதியில் திண்டுக்கல் மாவட்ட அணியை, 18 - 9 என்ற புள்ளிக்கணக்கிலும் வீழ்த்தினர். இறுதிப்போட்டியில், சிவகங்கை மாவட்டத்துடன் விளையாடிய கோவை மாணவர்கள் 11 - 8 என்ற புள்ளிக்கணக்கில், வெற்றி வாய்ப்பை நழுவ விட்டனர். இதனால், மாநில போட்டியில் இரண்டாமிடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை, டி.என்.ஜி.ஆர்., பள்ளி தலைமையாசிரியர் சதாசிவன், உடற்கல்வி துறையினர் கார்த்திகா பானு, சிவா தினேஷ் குமார் ஆகியோர் வாழ்த்தினர்.