உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அவிநாசி நான்கு வழி சாலையில் குடிநீர் குழாய்கள் உடைப்பு

 அவிநாசி நான்கு வழி சாலையில் குடிநீர் குழாய்கள் உடைப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-அவிநாசி நான்கு வழி சாலை விஸ்தரிப்பு பணியின் போது குடிநீர் குழாய் உடைப்பால் சில இடங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம்-அவிநாசி சாலை போக்குவரத்து நிறைந்த வழித்தடமாக உள்ளது. ஊட்டிக்கு செல்லும் வாகனங்கள், அதிக அளவில் உள்ளன. இதனால் மேட்டுப்பாளையம் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போதுள்ள மேட்டுப்பாளையம்-அவிநாசி இரு வழி சாலையை, நான்கு வழி சாலையாக மாற்ற, தமிழக அரசு அறிவித்தது. சாலையின் இரு பக்கம் விரிவாக்கத்துக்கு இடையூறாக உள்ள மரங்கள் வெட்டப்பட்டன. மேலும் மேட்டுப்பாளையம் நகரில் நான்கு வழி சாலைகள் அமைப்பதற்கு, தேவையான இடங்களை அளவீடு செய்து கட்டடங்களில் அம்புக்குறி போடப்பட்டுள்ளது. புதிதாக நான்கு வழி சாலை, 19.20 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி வரை, 38.2 கிலோ மீட்டருக்கும், சாலையின் மையப் பகுதியில், 1.2 மீட்டர் அகலத்தில் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளன. கோவை மாவட்ட எல்லையில் இருந்து, மேட்டுப்பாளையம் வரை, ஆறு இடங்களில் உள்ள பழைய பாலங்கள் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. நடூரில் மட்டும் பில்லர் அமைத்து புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. தற்போது நான்கு வழிச்சாலை பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. சாலையின் இருபக்கம் விஸ்தரிப்பு செய்ய, பொக்லைனில் குழி தோண்டும் போது, ஊராட்சிகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் பல இடங்களில் உடைந்து குடிநீர் வெளியேறி வருகிறது. இதனால் ஊராட்சிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இது குறித்து சாலை விஸ்தரிப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் கூறுகையில்,' சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய்கள், எவ்வளவு ஆழத்தில் குழாய்கள், பதிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியாமல் உள்ளது. மூன்று அடிக்கு குழி தோண்டும் பொழுது, பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்தும், போன் கேபிள்கள் அறுந்தும் விடுகின்றன. எனவே குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் அல்லது ஊராட்சி குடிநீர் திறந்து விடும் பணியாளர்கள், சம்பவ இடத்தில் இருந்து குழாய் உடைப்பை, உடனுக்குடன் சரி செய்ய முன் வர வேண்டும். குடிநீர் குழாய் உழைப்பை சரி செய்யாததால், சாலை விரிவாக்க பணிகள் தாமதம் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் சாலை விரிவாக்க பகுதிகளில் ஆட்களை நியமித்து கண்காணிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ