பொள்ளாச்சி: திருமூர்த்தி அணையில் இருந்து, பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்துக்கு வரும், 24ம் தேதி தண்ணீர் திறக்க திட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள், நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, பாசன நீர் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், பெருவாரிப்பள்ளம், துாணக்கடவு வழியாக சர்க்கார்பதிக்கு நீர் திறக்கப்பட்டு, அங்கு மின் உற்பத்தி செய்து, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு செல்லப்பட்டது. திருமூர்த்தி அணையில் நீர் இருப்பு வைத்து, நான்காம் மண்டல பாசனத்துக்கு நேற்று வரை ஐந்து சுற்று தண்ணீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது. இதையடுத்து, முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறித்து திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு கூட்டம், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. திருமூர்த்தி திட்டக்குழு தலைவர் பரமசிவம், திட்டக்குழு உறுப்பினர்கள், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் கார்த்திக்கேயன் மற்றும் அதிகாரிகள், பாசன சபை தலைவர்கள் பங்கேற்றனர். நீர்தேக்க திட்டக்குழு தலைவர் கூறியதாவது: திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. வரும், ஜன. 24ம் தேதி முதல், முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. ஐந்து சுற்று தண்ணீர் வழங்கவும், மொத்தம், 10,250 மில்லியன் கனஅடி நீர் வழங்கவும் வலியுறுத்தப்பட்டது. அதிகாரிகள், அரசுக்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இவ்வாறு, கூறினார்.
நீட்டிப்பு இல்லை!
நான்காம் மண்டல பாசன காலம் நேற்று நிறைவு பெற்றதும், பாசனம் அல்லாத வட்டமலைக்கரை அணைக்கு நீர் வழங்கி அணையை நிரப்ப, தண்ணீர் வழங்குவதை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுவதாக தகவல் பரவியது. இதன்படி நீர் வழங்கினால் அணையில் நீர் சேமிப்பது, கால்வாய்களை துார்வாருதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படும். இந்த கோரிக்கை ஏற்றால் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று நடந்த கூட்டத்தில் தண்ணீர் திறப்பு நீட்டிப்பு செய்ய ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதனால், நீட்டிப்பு செய்யாமல், நேற்றுடன் தண்ணீர் நிறுத்தம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது.