10 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு
கோவை: கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் வடக்கு, தெற்கு, சிங்காநல்லுார் சட்டசபை தொகுதிகளுக்கான பூத் ஏஜன்ட்டுகளுக்கான கூட்டம் வரதராஜபுரத்தில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட பொறுப்பாளர் செந்தமிழ் செல்வன் வரவேற்றார். அதில், மேற்கு மண்டல பொறுப்பாளரான, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: கோவை மாவட்டத்தில், 3,117 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதில், மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட மூன்று தொகுதிகளில் 870 ஓட்டுச்சாவடிகள் இருக்கின்றன. பகுதி கழக செயலாளர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பூத் தேர்வு செய்து, நிர்வாகிகளுடன் ஆலோசிக்க வேண்டும். பூத் கமிட்டி சரியாக இருக்கிறதா; அனைவருக்கு வந்திருக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். பூத் நிர்வாகிகளை குழு புகைப்படம் எடுத்து, தலைமை கழக செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து பூத் கூட்டத்துக்கும் பகுதி கழக செயலாளர்கள் செல்ல வேண்டும். பகுதி கழக செயலாளர்கள் இல்லாமல் கூட்டம் நடத்தக் கூடாது. பூத் நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் 100 ஓட்டுகள் வீதம் பிரித்து வழங்க வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு 'கிட்' வழங்கப்படும். அதில், பேட்ச், மொபைல் போனில் ஒட்டும் ஸ்டிக்கர், வண்டியில் ஒட்டும் ஸ்டிக்கர், கட்சி துண்டு இருக்கும். அவற்றை பூத் நிர்வாகிகளுக்கு வழங்கி, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டும். 2021 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தலில் பெற்ற ஓட்டுக்களை கணக்கெடுத்து, 2026 தேர்தலில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், தலா, 70 ஓட்டுகள் கூடுதலாக பெற வேண்டும். சராசரியாக 25 முதல் 30 குடும்பத்தினரின் ஓட்டுக்களை, தி.மு.க.வுக்கு கூடுதலாக சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு பூத்திற்கும் கட்சி நிர்வாகிகள் கொண்ட 'வாட்ஸ் அப்' குழு உருவாக்க வேண்டும். அக்குழு செயல்பாட்டை தலைமை கழகம் கண்காணிக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் செல்லும்போது, ஏற்கனவே நாம் தயாரித்து வைத்துள்ள 'மஞ்சள் புக்'கை எடுத்துச் சென்று, வாக்காளர் பட்டியலுடன் சரிபார்க்க வேண்டும். ஏதேனும் கோரிக்கை சொன்னால் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை மூன்று மாதத்துக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் 30 நாட்கள் நாம் செய்யும் வேலையே, 2026 தேர்தலில் ஏழாவது முறையாக தி.மு.க., ஆட்சி அமையும். எவர் ஒருவர் வந்தாலும் திராவிட மண்ணில் காலுான்றி விட முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில், தேர்தலில் கவனமாக செயல்பட வேண்டும். கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளையும் தி.மு.க., கூட்டணி வெல்ல வேண்டும். கோவைக்கு தேவையான நிதி ஒதுக்கப்படுகிறது. தங்க நகை பூங்கா கட்டுவதற்கான பணி துவங்கியுள்ளது. 7 தளங்களுடன் கட்டப்படும் நுாலகம் ஜனவரியில் திறக்கப்படும். இதற்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக 10 தொகுதிகளையும் ஜெயித்துக் காட்ட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் உள்ளிட்டோர் பேசினர். இதேபோல், தி.மு.க., வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தொண்டாமுத்துார், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதிகளுக்கான, தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், தொண்டாமுத்துாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு, தி. மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் ரவி தலைமை வகித்தார். இதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மாயத்தோற்றம்
செந்தில்பாலாஜி மேலும் பேசுகையில், ''முதல்வர் ஸ்டாலின், கோவையில் மேம்பாலத்தை திறந்து வைத்தார். மறுநாள் சிலர் வந்து, இனிப்பு கொடுக்கிறார்கள். 1,800 கோடி ரூபாய் செலவழித்து கட்டிய பாலத்தில், அ.தி.மு.க., செலவழித்தது, 80 கோடி மட்டுமே. அவர்கள் கட்டியதுபோல், மாயத்தோற்றத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். அதை மக்கள் ஏற்க மாட்டார்கள்,'' என்றார்.