| ADDED : ஜூலை 09, 2024 05:56 AM
கடலுார் : கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் அடுத்த வெள்ளைக்கரை காலனியை சேர்ந்தவர் அன்பழகன். இவர் நேற்று தனது மனைவியுடன், கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர்கள் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்ற முயன்றனர். இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து விசாரித்தனர். விசாரணையில், குடிசை வீட்டில் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறோம். புதியதாக வீடு கட்டுவதற்கு கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. வீட்டின் அருகில் கழிவுநீர் சூழ்ந்து விஷ பூச்சிகள் அதிகரித்து வீட்டுக்குள் வருகிறது. இதன் காரணமாக மகள்கள் சரியான முறையில் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, புதியதாக வீடு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து இக்கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.