விருத்தாசலம் : பா.ம.க., வேட்பாளர் மனுதாக்கலின் போது, கூட்டணி தலைமையான பா.ஜ., நிர்வாகிகள் இல்லாதது, பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.கடலுார் லோக்சபா தொகுதியில், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் போட்டிடுகிறார். அவர், நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தார். அவருடன், மாவட்ட செயலாளர்கள் முத்துக்கிருஷ்ணன், ஜெகன் உள்ளிட்ட முக்கிய பா.ம.க, நிர்வாகிகள், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி பங்கேற்றனர். ஆனால், கூட்டணியை தலைமை தாங்கும் பா.ஜ., கட்சி நிர்வாகிகள் யாரையும் காணவில்லை. இதனால், பா.ம.க., வினர் அதிருப்தியடைந்தனர்.இதுகுறித்து பா.ஜ., தரப்பில் கூறுகையில், 'தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையாக இருந்தும், வேட்பாளர் மனுதாக்கலின் போது, பா.ஜ., நிர்வாகிகள் இல்லாதது வருத்தமாக உள்ளது. எங்களது நிர்வாகிகளின் செயல்பாடு திருப்தியாக இல்லை என பா.ம.க.,வினர் கூறுவதாக தகவல் பரவுகிறது. இது குறித்து தலைமைக்கு தகவல் கொடுத்துள்ளோம்' என்றனர்.பா.ம.க., தரப்பில் கூறுகையில், 'மனுதாக்கலின்போது, பா.ஜ., முக்கிய நிர்வாகிகள் யாரும் அங்கு இல்லை. அதனால், மாற்று வேட்பாளர் மனுதாக்கல் செய்தபோது, பா.ஜ.,வை சேர்ந்த கடலுார் நிர்வாகி ஒருவரை உடன் அனுப்பி வைத்தோம். கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., நிர்வாகிகள் செயல்பாடு திருப்தியாக இல்லை. இதுகுறித்து எங்கள் கட்சி தலைமைக்கு தகவல் கொடுத்துள்ளோம் என்கின்றனர். கடலுாரில் பா.ஜ., கூட்டணியில் ஆரம்பமே இப்படியா என, இரு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புலம்ப துவங்கிவிட்டனர்.