| ADDED : ஏப் 14, 2024 04:55 AM
நெல்லிக்குப்பம்.: ''குன்றக்குடி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்தால் கூட அண்ணாமலை வெற்றி பெற முடியாது'' என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டில், மாவட்ட ஒருங்கிணைந்த யாதவர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:நம் சமுதாய மக்கள் சலுகைகளை அனுபவிக்க வேண்டுமானால் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும். அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவது முதல்வரின் விருப்பம். தேர்தல் முடிவுக்கு பிறகு இலாகா மாற்றம் இருக்கும். இனி தேர்தலே நடத்தக் கூடாது என்பதற்காக ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறார் மோடி. இந்தியா கூட்டணி அமைந்ததற்கு காரணம் ஸ்டாலின் என்பதால் அவர் மீது மோடி கோபப்படுகிறார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாக தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கு கூட தீர்வு கண்டுள்ளோம்.தவறு செய்பவர்கள் பா.ஜ.,விற்கு சென்றால் உத்தமராகி விடுகிறார்கள். இந்த தேர்தலில் இரண்டாம் இடம் யாருக்கு என்பதில் அ.தி.மு.க., - பா.ஜ., இடையே போட்டி நடக்கிறது. மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் அதானி 15 லட்சம் கோடி சம்பாதித்ததே அவர்களது சாதனை. பொய்யை மட்டுமே பேசுபவர் அண்ணாமலை. குன்றக்குடி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்தால் கூட அவரால் வெற்றிபெற முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி, முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, தி.மு.க., மாநகர செயலாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.