விருத்தாசலம்: 'தினமலர்' செய்தி எதிரொலியாக, விருத்தாசலத்தில் இருந்து விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் ரயிலை நீட்டிக்கக் கோரி, ரயில்வே அமைச்சரிடம் கடலுார் எம்.பி., மனு கொடுத்தார்.திருச்சி - சென்னை ரயில்வே மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக தினசரி ஐம்பதுக்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. கடலுார், அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலர்கள் பயனடைகின்றனர்.விருத்தாசலத்தில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் வசதி இல்லாமல், பொதுப்பயண பெட்டிகளில் 3 மணி நேரத்திற்கு மேலாக நின்றபடியே செல்லும் அவலம் தொடர்கிறது. மாறாக, விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் ரயிலை, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து நீட்டிக்க வேண்டும். மேலும், சேலம், ஈரோடு, கோவைக்கு ரயில் வசதி ஏற்படுத்திட வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, விருத்தாசலம் நகர அனைத்து வர்த்தகர்கள் நலச்சங்கம் சார்பில் விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் ரயிலை நீட்டிக்க வேண்டும். வந்தே பாரத் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி கடலுார் எம்.பி., விஷ்ணு பிரசாத்தை நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.அதன்படி, டில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேற்று நேரில் சந்தித்த கடலுார் எம்.பி., விஷ்ணு பிரசாத், விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் ரயிலை நீட்டிக்கவும்; வந்தே பாரத், தேஜஸ், ஹம்சஃபார் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லவும் கோரி மனு கொடுத்தார்.