| ADDED : மே 15, 2024 11:22 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் மணவாளநல்லுார் மணிமுக்தாற்றில் தடுப்பணை கட்டக் கோரி, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் மணிமுக்தா நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் தனவேல் தலைமையில் மணவாளநல்லுார், மணலுார் கிராம விவசாயிகள் இணைந்து, விருத்தாசலத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தை நேற்று காலை 10:00 மணியளவில் முற்றுகையிட்டனர்.அப்போது, உதவி செயற்பொறியாளர் வர தாமதமானதால், அவரது அறை வாசலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், உதவி பொறியாளர் வெங்கடேசன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.அதில், மணவாளநல்லுார் வழியாக செல்லும் மணிமுக்தாற்றில் தடுப்பணை கட்டும் பணிக்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட இடமாற்றம் செய்யப் பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, மணிமுக்தாற்றில் உடனடியாக தடுப்பணை கட்டும் பணியை துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அதற்கு, மணவாளநல்லுாரில் தடுப்பணை கட்ட அளவீடு செய்து, கோப்புகள் தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பிறகு, பணிகள் துவங்கும். எனவே, ஆதாரம் இல்லாத தகவல்களை நம்ப வேண்டாம் என விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையேற்று, விவசாயிகள் கலைந்து சென்றனர்.