பண்ருட்டி : அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் 40 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டி, பண்ருட்டியில் நேற்று நடந்த ஊர்வலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பங்கேற்றார்.கடலுார் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து ஆதரித்து அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பண்ருட்டியில் பிரசாரம் செய்தார்.அப்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டி, 200 பெண்கள் படைவீட்டம்மன் கோவிலில் இருந்து பாலகுடத்தை ஊர்வலமாக பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர்.தொடர்ந்து நடந்த பிரசாரத்தில் அவர் பேசியதாவது:இங்கு போட்டியிடும் காங்., மற்றும் பா.ம.க., வேட்பாளர்கள் வெளியூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள். தேர்தல் முடிந்ததும் திசைக்கு ஒருவராக சென்றுவிடுவார்கள். எனவே, மண்ணின் மைந்தரான சிவக்கொழுந்துக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.கடந்த சட்டசபை தேர்தலில் பொய் வாக்குறுதிகளை தந்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. ஆனால், அவர்கள் அளித்த வாக்குறுதிப்படி நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் தள்ளுபடி, காஸ் சிலிண்டருக்கு ரூ.100 குறைப்பு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என, எதையும் செய்யவில்லை.தற்போது, இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்கிறார். இவர் முதல்வராக வந்த பிறகுதான் அன்றாடம் கொலை, கொள்ளை, வழிப்பறி, நகைப்பறிப்பு, போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல், பெண்கள் தனியோ நடமாட முடியாத அவலம் உள்ளது.தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக், அம்மா ஸ்கூட்டர், அம்மா சிமெண்ட் திட்டங்கள் கொண்டு வந்த அ.தி.மு.க., ஆதரவு பெற்ற தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவை வெற்றி பெறச் செய்யுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.பிரசாரத்தில் முன்னாள் நகராட்சி சேர்மன் பன்னீர்செல்வம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றுமு் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.