| ADDED : ஏப் 01, 2024 04:20 AM
கடலுார் : கடலுாரில் கஞ்சா போதை ஆசாமிகள் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.கடலுார் மாநகரில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் விலையை விட கஞ்சா போதைப்பொருள் குறைவான விலையில் கிடைப்பதால் அதிகளவில் இளைஞர்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் இந்த பழக்கம் முற்றி, தற்போது கடலுாரில் வழிபறி செய்வது அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா, 50; என்பவர் கம்மியம்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.அப்போது கம்மியம்பேட்டை ரயில்கேட் சர்ச் அருகே, அவரது மொபைல் போனுக்கு அழைப்பு வந்துள்ளது. உடனே அவர் மொபைல் போனை எடுத்து பதில் பேசுவதற்குள் பின்னாள் வந்த 2 பேர் மொபைல் போனை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.மொபைல் போனை பறிகொடுத்த ராஜா போலீஸ் நிலையம் சென்று புகார் தெரிவித்துள்ளார்.உடனே பணியில் இருந்த போலீஸ்காரர், மொபைல்போன் பறிகொடுத்தவரை அழைத்துக்கொண்டு தேடிச் சென்றுள்ளனர். அப்போது அங்கே 4 இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்துள்ளனர்.போலீசாரை பார்த்ததும் அலட்சியமாக திரும்பி சென்றுவிடுங்கள் என 'சைகை' காண்பித்துள்ளனர். உடனே போலீஸ்காரரும், மொபைல் போன் பறிகொடுத்தவரும் திரும்பி வந்துவிட்டனர்.இது போன்று பல வழிப்பறி சம்பவங்கள் கடலுார் பகுதியில் அதிகரித்துள்ளன. எனவே போலீசார் இரவு ரோந்துப்பணியை துரிதப்படுத்த வேண்டும்.