கடலுார் : அனுமதியின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேருக்கு, தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலுார் கோர்ட் தீர்ப்பு கூறியது.கடலுார் அடுத்த பெரியகங்கணாங்குப்பத்தில் வெளிநாட்டினர் தங்கியிருப்பதாகவும், அங்கு விபசாரம் நடப்பதாக ரெட்டிச்சாவடி போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடந்த 3.7.2021 அன்று, இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, தகவல் கூறப்பட்ட வீட்டில், வங்கதேச நாட்டை சேர்ந்த சத்தார்முல்லா, 49; சம்சுல்ஷேக் மகள் பாத்திமா, 25; நஜ்முல்சிக்தார் மனைவி பரிதாபீவி, 35; நஜ்முல் சிக்தார், 32; பாபுஷேக், 28; ஆகிய 5 பேர் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்கள் போலியாக ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து அனுமதியின்றி தங்கியிருந்தது தெரியவந்தது.மேலும், புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்தை சேர்ந்த கவின் (எ) செல்வம் ,44; பண்ருட்டி குடுமியான்குப்பத்தை சேர்ந்த தனுசு ,51; ஆகியோர் வீடு பார்த்து கொடுத்ததும் தெரியவந்தது.அதையடுத்து, சத்தார்முல்லா உள்ளிட்ட 5 பேர் மற்றும் செல்வம், தனுசு ஆகிய 7 பேரை கைது செய்து, அவர்கள் மீது ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு கடலுார் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் வளர்மதி ஆஜரானார் வழக்கை விசாரித்த நீதிபதி உத்தமராஜ், வங்கதேசத்தை சேர்ந்த சத்தார்முல்லா, நஜ்முல் சிக்தார், பாபுஷேக், பாத்திமா, பரிதாபீவி ஆகியோர் அனுமதியின்றி தங்கி இருந்ததற்கும், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயார் செய்து பயன்படுத்தியதற்காக தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து, தீர்ப்பு கூறினார். செல்வம், கவின் விடுவிக்கப்பட்டனர்.