| ADDED : ஜூலை 26, 2024 04:26 AM
விருத்தாசலம்: எடச்சித்துார் ஏரியில் விதி மீறலாக மண் எடுப்பதாக வந்த புகாரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.மங்கலம்பேட்டை அடுத்த எடச்சித்துார் ஏரியில் கடந்த சில நாட்களாக வண்டல் மண் எடுக்கும் பணி நடந்து வருகிறது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் விதிமீறலாக அளவுக்கு அதிகமாக தோண்டி எடுக்கப்படும் மண், அதே பகுதியில் ரியல் எஸ்டேட் வீட்டு மனைகளில் கொட்டப்படுவதாகவும், விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. தகவலறிந்த வருவாய்த் துறையினர், மங்கலம்பேட்டை போலீசார் சென்று விசாரித்தனர்.மேலும், வண்டல் மண் எடுக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கூறி அங்கிருந்த வாகனங்களை வெளியேற்றினர். மேலும், இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், 'எடச்சித்துார் ஏரியில் இதுபோல் அளவுக்கு அதிமாக தோண்டப்பட்ட பள்ளங்களில் தேங்கிய மழைநீரில் மூழ்கி இதுவரை 9 சிறுவர்கள் இறந்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் மூன்று சிறுவர்கள் இறந்த விவகாரத்தில் கலெக்டர் வரை நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளார்.எனவே, விதிமீறலாக மண் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.