| ADDED : மே 24, 2024 03:49 AM
சிதம்பரம்: சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவர் இறந்ததை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் அடுத்த வி.குமாரமங்கலத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் ஹரிஷ்,16: அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 14 ம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியானது. அதில், தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த ஹரிஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை, அவரது பெற்றோர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கடந்த 9 நாட்களாக, சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள், சரியான சிகிச்சை அளிக்காததால் ஹரிஷ் இறந்ததாக மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம், அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் கல்பனா மற்றும் போலீசார், டாக்டர்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.