| ADDED : ஏப் 21, 2024 05:49 AM
கடலுார்: கடலுார் அண்ணா மேம்பாலத்தில் லாரி மோதி சேதமடைந்த தடுப்புச்சுவர் சீரமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது.கடலுார் கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அண்ணா மேம்பாலம் வழியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த மாதம் சென்னையில் இருந்து வடலுாருக்கு ஜல்லி ஏற்றி சென்ற டிப்பர் லாரி, இப்பாலம் வழியாக சென்றது.தரைகாத்த காளியம்மன் கோவில் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதனால், பாலத்தின் தடுப்புச்சுவர் உடைந்து விழுந்தது. பாலத்தின் முக்கிய பகுதியான இங்கு, விபத்துக்களை தடுக்க, போலீசார், தற்காலிகமாக இரும்பு தடுப்புகளை வைத்தனர். ஆனால், இதுநாள் வரையில், தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு, தடுப்புச்சுவர் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.