உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கரும்பு விவசாயிகள் முற்றுகை விருத்தாசலத்தில் பரபரப்பு

கரும்பு விவசாயிகள் முற்றுகை விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம்: கரும்பு விவசாயிகள் விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பெண்ணாடம் அடுத்த இறையூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு உரிய நிலுவைத் தொகை வழங்கக் கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம் நேற்று அறிவிக்கப்பட்டது.சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், மாநில தலைவர் வேல்மாறன், மாநில செயலாள் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.அதில், பாலக்கரை அம்மா உணவகத்தில் இருந்து கரும்பு விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர், கரும்புகளை ஏந்தியபடி ஊர்வலமாக வந்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.அப்போது, மத்திய அரசு நிர்ணயம் செய்த தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். ஐகோர்ட் உத்தரவின்படி 4 ஆண்டுகால பாக்கி பணம் 78 கோடி ரூபாயை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்.டி.ஒ., அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தகவலறிந்த ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் அவரது அறையில் இருந்து வெளியே வந்து விவசாயிகளிடம் மனுவை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கரும்பு விவசாயிகள் முற்றுகை சம்பவத்தால், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்