உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குப்பை கொட்ட இடமின்றி மாநகராட்சி அதிகாரிகள்... தவிப்பு; எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம் வலிய சென்று சமாதானம்

குப்பை கொட்ட இடமின்றி மாநகராட்சி அதிகாரிகள்... தவிப்பு; எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம் வலிய சென்று சமாதானம்

கடலுார், : கடலுார் மாநகராட்சியில் உள்ள ஒரே ஒரு குப்பை கிடங்கிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், குப்பை கொட்டுவதற்கு இடமின்றி அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.கடலுார் மாநகராட்சியில் நாள்தோறும் 20 முதல் 30 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. குப்பை கொட்ட முறையான இடம் இல்லாததால் மாநகராட்சி நிர்வாகம் அவதிப்படுகிறது. நகரில் குப்பைகள் முழுவதையும் அப்புறப்படுத்த இடமில்லாததால், ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதை தொழிலாளர்கள் தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால், நெடி கலந்த புகையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.பச்சையாங்குப்பம், கம்பியம்பேட்டை பகுதியில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்குகளில் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக குப்பைகள் கொட்டாமல் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் வசந்தராயன்பாளையம் குப்பை கிடங்கில் மூன்று நாட்களுக்கு முன் தீப்பிடித்து எரிந்து துர்நாற்றத்துடன் கரும்புகை பரவியது. இதனால், அப்பகுதி மக்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதையடுத்து, நேற்று முன்தினம் குப்பைகளைக் கொட்டச் சென்ற மாநகராட்சி குப்பை வண்டிகளை அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சிறை பிடித்தனர். கடலுார் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, குப்பைகள் கொட்டாமல் இருக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்து குப்பை வண்டிகளை திருப்பி அனுப்பினர்.ஏற்கனவே இரண்டு குப்பை கிடங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது வசந்தராயன்பாளையம் குப்பை கிடங்கிற்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலர்கள் என்ன செய்வது என குழப்பம் அடைந்துள்ளனர். இதனால், டி.எஸ்.பி., பிரபு மற்றும் மாநகராட்சி கமிஷனர் காந்திராஜ் தலைமையிலான அலுவலர்கள் தானாக சென்று நேற்று அப்பகுதி மக்களிடையே சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது குப்பை கிடங்கில் காய்கறிகள் மற்றும் பழ வகைகள் போன்றவற்றை தரம் பிரிப்பதாக கூறுகின்றனர். தற்போது தீ விபத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்ததால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால், இங்கு குப்பைகள் கொட்ட அனுமதிக்க மாட்டோம் என பொதுமக்கள் கூறினர். அதற்கு பதிலளித்த கமிஷனர் காந்திராஜ், பொதுமக்களை பாதிக்காத வகையில் அனைத்து பணிகளும் நடந்து வந்தன. திடீர் தீ விபத்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வேறு இடம் தேர்வு செய்யப்படும் பணி நடந்து வருகிறது. இதனால், ஆறு மாதம் கால வரை இங்கு குப்பைகள் கொட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ