உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அதிருப்தி வேட்பாளர்களால் அரசியல் கட்சிகள் "களைகட்டுது சிதம்பரம் நகர மன்ற தேர்தல்

அதிருப்தி வேட்பாளர்களால் அரசியல் கட்சிகள் "களைகட்டுது சிதம்பரம் நகர மன்ற தேர்தல்

சிதம்பரம் நகர மன்றத் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட சீட் கிடைக்காத அதிருப்தி கட்சியினர் 'உள்ளடி' வேலையில் இறங்கியுள்ளதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். அதனால் ஓட்டு சேகரிப்பைக் காட்டிலும் அதிருப்தியாளர்களை சரிகட்டும் வேலையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.சிதம்பரம் நகராட்சி 100 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது. மூத்த அரசியல் கட்சியினர் தலைவர்களாக இருந்து வந்த நிலையில் கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக தலைவர் பதவி சுழற்சி முறையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் நகராட்சி தலைவர்களாகவும், கவுன்சிலர்களாகவும் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர்கள் 'மூட் அவுட்' ஆகினர்.தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., - வி.சி., - காங்., என ஒவ்வொரு கட்சியிலும் போட்டி போட்டு தங்களின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு சீட் கேட்டு கட்சி தலைமையிடம் பல வகையிலும் முயற்சித்தனர்.கூட்டணி ஏதுமின்றி கட்சிகள் தனித்து போட்டியிடுவதால் தங்களுக்கு நிச்சயம் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்து வந்தனர். ஆனால் ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், சீட் கிடைக்காதவர்கள் தங்களின் கட்சி வேட்பாளர்களுக்கு அதிருப்தியாளர்களாக மாறியுள்ளனர்.அ.தி.மு.க.,வில் நகர செயலர் தோப்பு சுந்தர் மனைவி நிர்மலாவிற்கு சீட் வழங்கப்பட்டது. சீட் கேட்டு கிடைக்காத பலரும் அதிருப்தியடைந்துள்ளனர். தி.மு.க.,வில் சீனியர் தலைவர்கள் பலர் இருக்க, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா மனைவி ஜெயலலிதாவிற்கு சீட் கொடுத்தது அக்கட்சியினரை அதிருப்தியடைய செய்துள்ளது.வேட்பாளர் பட்டியலிலும் பெயர் இல்லை, ரேஷன் கார்டிலும் பெயரில்லாதவரை வேட்பாளராக தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம் என அக்கட்சியினர் புலம்புகின்றனர். தே.மு.தி.க., வில் நகர செயலர் விஜயகுமார் மனைவி மங்கையற்கரசிக்கு சீட் ஒதுக்கப்பட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.அதன் பிறகு கூட்டணி உடன் பாட்டால் தொகுதியை மா.கம்யூ., கட்சிக்கு விட்டுக் கொடுக்கப்பட்டதால் தே.மு.தி.க., வினர் அதிருப்தியடைந்ததுடன், கட்சி அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டு மறியலும் செய்தனர். காங்., கட்சியில் டாக்டர் மஞ்சுளா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், பல ஆண்டுகள் கட்சியில் பல போராட்டங்களை நடத்தி நமக்கு கிடைக்கவில்லையே மகளிரணியினர் கடுமையான அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். பா.ம.க., - வி.சி., கட்சிகள் இதுவரை வேட்பாளர் அறிவிக்கவில்லை.தலைவர் பதவி மட்டுமல்ல வார்டு கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளர்களை அறிவித்திருப்பதும் ஒவ்வொரு வார்டிலும் அதிருப்தியாளர்கள் உருவாகியுள்ளனர். சில வார்டுகளில் கட்சியில் சீட் கிடைக்காத பலரும் சுயேட்சையாக களமிறங்க மனு தாக்கல் செய்துள்ளனர்.சீட் கிடைக்காத அதிருப்தியாளர்கள் உள்ளடி வேலையை துவக்கியுள்ளனர். இதனால் ஓட்டு சேகரிக்கும் வேலைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட அதிருப்தியாளர்களை சரிகட்டும் வேலையில் கட்சி வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிருப்தியாளர்கள் வீடுகளுக்கே சென்று சால்வை அணிவித்து குஷி படுத்தும் வேலையும் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ