விருத்தாசலம் : விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்திற்கு, மழையால் பாதித்த நெற்பயிர்களுடன் விவசாயிகள் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார். வருவாய்துறை, வேளாண் துறை, வனத்துறை, தோட்டகலை துறை, மின் துறை, நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, மணிமுக்தாறு நீர்பாசன விவசாயிகள் சங்க தலைவர் தனவேல் தலைமையிலான விவசாயிகள் மழை வெள்ளத்தால் பாதித்த நெற் பயிர்களுடன் வந்து, ஆர்.டி.ஓ., விடம் முறையிட்டனர்.அப்போது, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் திடீர் மழையினால் நாசமாயின. வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இதனை கேட்ட ஆர்.டி.ஓ., உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து, மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி, விவசாயிகள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ரகசியமாக நடக்கும் கூட்டம்
கூட்டத்திற்கு, விவசாயிகள் மற்றும் செய்தியாளர்களுக்கு முறையான அழைப்பு விடுப்பதில்லை. இதனால், அந்தந்த துறை அதிகாரிகள் மட்டும் கூட்டத்தில் கலந்து கொண்டு கையெழுத்திட்டு செல்லும் நிலை உள்ளது. விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், நல்லுார் என கோட்ட அளவில் நடக்கும் கூட்டத்திற்கு முறையான அழைப்பு இல்லாததால், 10க்கும் குறைவான விவசாயிகளே கலந்து கொள்ளும் நிலை உள்ளது.விவசாயிகள் பெருமளவில் கலந்து கொண்டால், பிரச்னை வரும் என எண்ணி, அதிகாரிகளும் மாதந்தோறும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கூட்டத்தை நடத்தி முடித்து விடுகின்றனர்.