| ADDED : மார் 19, 2024 05:58 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் காங்., நிர்வாகிகளுக்குள் கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளதால், கட்சியை கரைசேர்க்க முடியாமல் எம்.எல்.ஏ., தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் மட்டும் தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓரிரு மாதங்களில் எம்.எல்.ஏ., அலுவலகத்தை கட்டுப்பாட்டில் வைப்பது தொடர்பாக நிர்வாகிகளுக்குள் போட்டி ஏற்பட்டது.இதனால் தினசரி எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு வந்து சென்ற ஒருசில தொண்டர்களின் வருகையும் தடைபட்டது. நாளடைவில் இரு கோஷ்டிகளாக பேனர்கள், போஸ்டர்கள் போட துவங்கினர். சமீபத்தில் நகர, மாவட்ட நிர்வாகிகள் நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்ட சம்பவமும் நடந்துள்ளது.அதுபோல், மங்கலம்பேட்டை பேரூராட்சியில் எம்.எல்.ஏ., நிதி 10 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட நிகழ்குடையை திறப்பதற்கு பேரூர் நிர்வாகிகளுக்குள் போட்டா போட்டி ஏற்பட்டது. ஒரு வழியாக இரு தரப்பையும் சமாதானம் செய்த ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சமீபத்தில் நிழற்குடையை திறந்து வைத்தார். மாவட்டத்தில் ஒன்பது சட்டசபை தொகுதிகள் இருந்தும், ஒரு தொகுதியில் மட்டுமே காங்., கட்சிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தொகுதி முழுவதும் நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகளுக்குள் போட்டி நிலவுவது, எம்.எல்.ஏ.,வுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.