உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வடலுாரில் அரசு கலை, அறிவியல் கல்லுாரி திறப்பு

 வடலுாரில் அரசு கலை, அறிவியல் கல்லுாரி திறப்பு

வடலுார்: வடலுாரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திறப்பு விழா நடந்தது. வடலுார், பார்வதிபுரத்தில் ரூ.,13.71 கோடி மதிப்பில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை, நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், விஷ்ணு பிரசாத் எம்.பி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயின்ற மாணவர்கள் உயர்கல்வி அடைய பொருளாதார தடை இருக்க கூடாது என்ற நோக்கில், மாதந்தோறும் ரூ.,1000 வழங்கும் 'புதுமைப் பெண்' மற்றும், 'தமிழ் புதல்வன்' திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடலுார் மாவட்டம் மாநில அளவில், அரசுப்பள்ளி தரவரிசையில், 5வது இடம் பிடித்தது. குறிஞ்சிப்பாடியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைய கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் கடந்த, 2022 முதல் வடலுாரில் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன வளாகத்தில் கலைக்கல்லுாரியை துவக்கி வைத்தார். நிரந்தர கட்டடம் தொடர்பான கோரிக்கையை ஏற்று தற்போது இந்த புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது கல்லுாரியில், 505 மாணவிகள், 272 மாணவர்கள் என மொத்தம், 777 மாணவர்கள் பயில்கின்றனர். மொத்தம், 5.5 ஏக்கர் பரப்பளவில், 2 தளங்களுடன் ரூ.,13.71 கோடி மதிப்பில், அனைத்து அடிப்படை அம்சங்களுடன், காற்றோட்டமான சூழலில் இந்த கல்லுாரி கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வில் கல்லுாரி கல்வி மண்டல இணை இயக்குனர் (திட்டங்கள் கோட்டம்) மலர், தஞ்சாவூர் செயற்பொறியாளர் சிவகுமார், வடலுார் சேர்மன் சிவக்குமார், துணை சேர்மன் சுப்புராயலு, வடலுார் அரசு கலை கல்லுாரி முதல்வர் வண்ணமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !