கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தி, அவர்களின் வளர்ச்சிக்கு, உறுதுணையாக அரசுப்பள்ளி விளங்குகிறது. கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த தீவளூரில் கடந்த, 1986ல் அரசு உயர்நிலைப்பள்ளி கொண்டு வரப்பட்டது. கடந்த 2011ல் ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு தலைமை ஆசிரியர் உட்பட, 2 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 5 பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் 2 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 1 பட்டதாரி ஆசிரியர், பகுதி நேர ஆசிரியர்கள் உடற்கல்வி, கணினி அறிவியல் ஆசிரியர்கள் உட்பட, 13 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு சுற்றியுள்ள தீவளூர், தாழநல்லுார், சாத்துக்கூடல், உச்சிமேடு, வெண்கரும்பூர், சத்தியவாடி, நந்தப்பாடி, ஆலிச்சிக்குடி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, 181 மாணவர்கள், 140 மாணவியர்கள் என, 321 பேர் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவர்கள் கடந்த, 2022 கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர். இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளிலும், வெளிநாடுகளிலும் உயர் பதவியில் உள்ளனர். பேட்டிகள்: கல்வித்திறன் மேம்படுத்தப்படும் நான் இப்பள்ளியில் கடந்த, 5 மாதங்களுக்கு முன் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன். இப்பகுதி மாணவர்கள் ஏழை, நடுத்தர மாணவர்களாக உள்ளனர். அவர்கள், கல்வியில் சிறந்து விளங்க பாடுபடுவேன். இவர்களுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் பெற்று தருவேன். கடந்த கல்வி ஆண்டுகளில் பெற்றது போலவே, வரும் கல்வி ஆண்டுகளிலும், 100 சதவீத தேர்ச்சியை கொடுப்பேன். மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவது எனது லட்சியம். -தமிழ்தாசன், தலைமை ஆசிரியர் உயர் பதவியில் பள்ளி மாணவர்கள் நான் கடந்த 1997 முதல் 2025 வரை 28 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரிந்தேன். இங்கு படிக்கும் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றில் சிறந்த கல்வியை வழங்கி வருகிறோம். பள்ளியில் சுகாதாரமான வகுப்பறை, ஹைடெக் லேப் பெற்று தந்து மாணவர்களின் திறனை மேம்படுத்தி உள்ளோம். கடந்த 2019ல் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் துவக்கிய 'விழுதுகள்' என்ற அமைப்பு சார்பில், தற்போது படிக்கும் மாணவர்களின் நலனுக்காகவும், பள்ளி வளர்ச்சிக்காகவும் ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நான் ஓய்வு பெற்றபோது மாணவர்களின் கல்வி நலனுக்காக புரவலர் திட்டத்திற்கு ரூ. 28,000; 'விழுதுகள்' அமைப்பு சார்பில் ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இப்பள்ளி மாணவர்கள் உயர் பதவிகளில் உள்ளது பெருமையாக உள்ளது. -ஜெயசங்கர், ஓய்வுபெற்ற அறிவியல் ஆசிரியர். பள்ளி வளர்ச்சிக்கு உதவி நான் இப்பள்ளியில் கடந்த, 2000 முதல், 2002 வரை படித்தேன். தற்போது, 'விழுதுகள்' என்ற அமைப்பை உருவாக்கி பள்ளி மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் உயர்கல்விக்காக நிதி வழங்கி அவர்களின் மேம்பாட்டிற்கு உதவி வருகிறோம். தொடர்ந்து இப்பள்ளி வளர்ச்சி, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து பணி செய்வோம். -ஸ்டாலின், முன்னாள் மாணவர் ஆசிரியர்களுக்கு நன்றி நான் இப்பள்ளியில் கடந்த 2014 - 17 கல்வியாண்டு வரை இப்பள்ளியில் படித்தேன். தற்போது, உத்திரபிரதேசம் மாநிலம், கான்பூரில் எம்.டெக்., ஏரோ ஸ்பேஸ் படிக்கிறேன். இப்பள்ளி ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்ததால் தான் உயர்கல்வி பயில காரணமாக இருந்தது. மேலும், இப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயின்று மாணவர்கள் நல்ல நிலைக்கு செல்வதற்கு தரமான கல்வியை கொடுக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி. -அம்பேத், முன்னாள் மாணவர்