| ADDED : நவ 25, 2025 05:44 AM
கடலுார்: வேப்பூர் அருகே சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர், குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார். கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த பொயனப்பாடி கிராமத்தில் சட்டவிரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை ஸ்கேனிங் மெஷினை பயன்படுத்தி சிலர் கண்டறியும் சோதனையில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது . இதுகுறித்து வேப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் அகிலன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கடந்த அக்., 23ம் தேதி பொயனப்பாடி கிராமத்தில் செந்தில்குமார் என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது ஸ்கேனிங் மெஷினை பயன்படுத்தி கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து செந்தில்குமார்,36; கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்துார் கிராமம் ராஜா,36; உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். இதில், ராஜாவின் குற்றச்செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், கடலுார் மத்திய சிறையில் ராஜாவிடம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான நகலை போலீசார் வழங்கினர்.