கடலுார் : தி.மு.க., ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிலை குறித்து விளக்க வேண்டும் என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் கேள்வி எழுப்பினார்.கடலுார் புதுப்பாளையத்தில், வடக்கு மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் நடந்தது. மாணவரணி மாவட்ட செயலாளர் சிவா தலைமை தாங்கினார். மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் சுப்ரமணியன், பகுதி செயலாளர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், வெங்கட்ராமன், ஒன்றிய செயலாளர் காசிநாதன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட அவைத் தலைவர் குமார் வரவேற்றார்.முன்னாள் அமைச்சர் சம்பத் பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில் இயற்கை பேரிடரின்போது, மக்களின் உயிர் காக்கப்பட்டது. ஆனால், தற்போது, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சென்னை, திருநெல்வேலி, துாத்துக்குடி பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.தி.மு.க., ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக 7,330 கோடி ரூபாய் முதலீடு வந்ததாக கூறுகின்றனர். ஆனால், இதன் நிலைப்பாடு என்ன. தமிழக முதல்வர் ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டில் நிர்வாகம் இல்லாததால் கல்வி, சுகாதாரம், நகராட்சி என எந்த துறைகளை எடுத்தாலும் நிதி இல்லாமல் உள்ளது. ஊழல் தான் நடக்கிறது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத, திறமையில்லாத அரசாக தி.மு.க., உள்ளது. தி.மு.க., ஆட்சியை விரட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தலைமைக் கழக பேச்சாளர் பாஸ்கரன், மீனவரணி தங்கமணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர் தஷ்ணா, மாவட்ட துணை செயலாளர் மணிமேகலை தஷ்ணா, தமிழ்ச்செல்வன், மாணவரணி ஸ்ரீநிவாசன், சண்முகம், சரத், மருத்துவரணி கிருஷ்ணன், வர்த்தக பிரிவு வரதராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.