கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பருவம் தவறிய கனமழையால் நடவு செய்யப்பட்டிருந்த கத்தரி, மணிலா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் இருக்கும். டிசம்பர் இறுதி யில் வடகிழக்குப்பருவ காற்று விடைபெறும். கடந்த ஆண்டு, அக்டோ பர் கடைசி வாரத்தில்தான் வடகிழக்குப்பருவ மழை துவங்கியது. 10 ஆண்டு களாக சராசரி மழையளவான 1200 மி. மீட்டரில் 1100 மி. மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. எனவே கடந்த ஆண்டில் பெய்யக்கூடிய மழையளவில் 100 மி.மீ., மழை குறை வாகவே பெய்துள்ளது.வழக்கம்போல் கடந்த டிசம்பர் இறுதியில் மழை இல்லாமல் இருக்கவே, விவசாயிகள் சாகுபடித்தொழிலை பட்டத்தே பயிரிடத் துவங்கினர். வெயில் இல்லாத குளிர்ந்த காலம் காய்கறி பயிர்களுக்கு உகந்தது என்பதால் கடலுார் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளான ரெட்டிச்சாவடி, நல்லாத்துார், கீழ்அழிஞ்சிப்பட்டு, கங்கணாங்குப்பம், நாணமேடு, உச்சிமேடு, சுபா உப்பலவாடி, கண்டக்காடு, தாழங்குடா, அன்னவல்லி உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் அதிகளவு பயிர் செய்ய துவங்கினர்.மணிலா, வெங்காயம், கத்தரி, மிளகாய், சுரைக்காய் போன்ற காய்கறிகள் வேகமாக சாகுபடி செய்தனர். இது ஒரு புறமிருக்க, சம்பா நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில், சற்றும் எதிர்பாரத வகையில் ஜனவரி மாதத்தில் திடீனெ கனமழை பெய்தது.கடலுாரில் 80 மி.மீட்டருக்கும் மேலும், சிதம்பரத்தில் 23 மி.மீட்டர் மழை பதிவானது. பருவம் தவறி பெய்த இந்த மழையால் சாகுபடி செய்வதற்காக நிலத்தை நன்கு புழுதியாக்கி நடவு செய்யப்பட்டதால் தண்ணீர் வெளியே செல்லாமல் தேங்கியது.தொடர்ந்து 3 நாட்களாக தண்ணீர் வடியாத மழைநீரால், சாகுபடி செய்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நெற்பயிர்கள் முளைக்க துவங்கியுள்ளன. காய்கறி பயிர்களான கத்தரி, மிளகாய், வெங்காயம், சுரைக்காய் போன்ற காய்கறி பயிர்கள் வேர் அழுகி செடிகள் வாடியுள்ளன. இதில் 20, 30 சதவீத செடிகள் இருந்தால் கூட முழுமையாக விவசாயிகளுக்கு பயன் தராது. எனவே சாகுபடி செய்த காய்கறி செடிகளை மீண்டும் உழுது, புதிய நடவு செய்தால்தான் அறுவடை செய்ய முடியும். இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.மழை காலத்தில் வருவாயின்றி தவித்த விவசாயிகள், கடன்வாங்கி பயிர்செய்து துவக்கத்திலேயே நஷ்டம் ஏற்பட்டுவிட்டதே என புலம்புகின்றனர்.