கடலுார்: கடலுார் மாவட்ட கோர்ட்டுகளில் வரும் டிச., 13ம் தேதி லோக் அதாலத் நடக்கிறது என, முதன்மை மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி தெரிவித்துள்ளார். அவரது செய்திக் குறிப்பு: மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, நெய்வேலி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி ஆகிய கோர்ட்டுகளில், 'லோக் அதாலத்' எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் டிச., 13ம் தேதி நடக்கிறது. இதில், நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், சமரசத்திற்கு எடுத்துக் கொள்ள கூடிய கிரிமினல் வழக்குகள், பண மோசடி, வாகன விபத்து, காசோலை மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள், வங்கி சார்ந்த வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரே நாளில் தீர்வு காணப்படும். கோர்ட்டுகளில் நிலுவையில் இல்லாத வங்கிக் கடன் வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பொதுமக்களும், வழக்காடிகளும் வழக்கறிஞர்கள் மூலமாக அந்தந்த கோர்ட் எல்லைக்குட்பட்ட வழக்குகளை அந்தந்த கோர்ட்டுகளில், நடக்கும் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக சமரசம் செய்து கொள்ளலாம். மக்கள் நீதிமன்றம் மூலமாக சமரசம் பேசி முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. இந்த வாய்ப்பை வழக்காடிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.