சிதம்பரம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி என்.சி.சி., மாணவிக்கு, தேசிய மாணவர் படையின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள குமராட்சியில், எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லுாரி மாணவி கீர்த்தனா, 3ம் ஆண்டு, ஆங்கிலம் படித்து வருகிறார். என்.சி.சி., மாணவியான இவர், கடந்தாண்டு துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில், 3 வெள்ளி பதக்கங்களை பெற்றார். தொடர்ந்து, இந்தாண்டு, டில்லியில் நடந்த டி.எஸ்.சி., எனப்படும் தல்சானிக் கேம்பில் பங்கேற்றபோது, நடைபெற்ற தேசிய அளவிலான, தேசிய மாணவர் படை துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்தர். இந்நிலையில். மாணவி கீர்த்தனாவின் சாதனைகளை பாராட்டி நடப்பு ஆண்டிற்கான டி.ஜி., என்.சி.சி., கமாண்டேஷன் அட்டை (கவுரவ விருது) அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மாணவர் படையில் சாகசம், சமூக சேவை, தலைமைத்துவத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இதில் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கம் ஆகியன அடங்கும். இந்த விருது தேசிய மாணவர் படையில் தலை சிறந்த விருதாக கருதப்படுகிறது. விருது பெற்ற மாணவி கீர்த்தனா மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர் சரவணனை, கல்லுாரி முதல்வர் மீனா வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து 6 வது தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி., கமெண்டிங் ஆபிஸர் கர்னல் சக்கரபர்த்தி, நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நாராயன் மற்றும் அலுவலர்கள் மாணவி கீர்த்தனா, அலுவலர் சரவணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.