சுற்றுலா நகரமான சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. அதேபோன்று, அண்ணாமலை பல்கலைழகம், வன சுற்றுலா மையமான பிச்சாவரம் உள்ளிட்டவை அமைந்துள்ளது. மேலும், சீர்காழி, கும்பகோணம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்ல, பிரதான வழியாக உள்ளதால், சிதம்பரம் நகருக்குள் தினமும் வருவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன், வாகனங்களும் அதிக அளவில் வருகிறது.இதனால், சிதம்பரம் நகர வீதிகள் எப்போதுமே கடும் போக்குவரத்து நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதனை கருத்தில் கொண்டு, நகருக்கு வெளியே, புறநகர் பஸ் நிலையம் அமைத்து, போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சார்பில், மாவட்ட அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.அதையேற்று, சிதம்பரத்தில் அனைத்து வசதிகளுடன் புறநகரில் பஸ் நிலையம் அமைக்க அரசு அறிவித்தது. அதையொட்டி, விழுப்பும் - நாகை நான்குவழி சாலையொட்டி, லால்புரம் என்ற இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க நகராட்சிக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது.அரசின் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நிதியில் இருந்து, 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கடந்த ஆண்டு ஜூன் 2ம் தேதி, அமைச்சர் பன்னீர்செல்வம் புதிய பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.கடக்கால் தோண்டும் பணிகள் துவங்கிய நிலையில், இடை இடையே கடும் மழை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டு, விறுவிறுப்பின்றி மந்தமாக நடந்து வருகிறது. முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது தான் பில்லர் அமைக்கும் பணிகள் நிறைவு பெற உள்ளது.ஒப்பந்தப்படி, 18 மாதங்களுக்குள் பணிகள் செய்து முடிக்க காலக்கெடு வைத்துள்ள நிலையில், பணிகள் துவங்கி ஒராண்டு கடந்துவிட்டது. இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், புதிய பஸ் நிலைய பணிகளை முடிக்க சாத்தியமில்லை எனவே, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே சமயம், பஸ் நிலையத்தில் இருந்து சிதம்பரம் நகருக்கு வரும் வகையில், நகரமன்ற சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பேரில், நகராட்சி அதிகாரிகள், வழித்தடத்தை பார்வையிட்டனர். அதில் பஸ் நிலையத்தில் துவங்கி, பாசிமுத்தான் ஓடையின் குறுக்கே பாலம் அமைத்து, வண்டிகேட் வழியாக நகரப்பகுதிக்கு வரும் வகையில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.