தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், பசுமை வீடு திட்டம் நிறுத்தப்பட்டு, கலைஞர் கனவு இல்ல திட்டம் கொண்டுவரப்பட்டது. குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை எட்ட, 2030ம் ஆண்டிற்குள், 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து கூரை, ஓட்டு வீடுகள் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டது. இதனால், அதிக பயனாளிகளுக்கு வீடுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஊராட்சி தலைவர்களும்,அசுர வேகத்தில் கணக்கெடுப்பு பணிகளை செய்து முடித்தனர்.மாவட்டம் முழுவதும் சிறிய ஊராட்சிகளில் 50 முதல் 150 , பெரிய ஊராட்சிகளில் 300 முதல் 500 பயனாளிகள் வரையிலும் கணக்கெடுத்து அரசுக்கு அனுப்பினர். பின்னர், அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து, யார் யாருக்கு வீடு வழங்கப்பட உள்ளது என, பயனாளிகள் பட்டியலும் தயாராகியது. அதில் கூரை வீட்டிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.அரசு, பயனாளிகள் பட்டியலும் தயார் செய்ததால், கண்டிப்பாக வீடு கிடைத்துவிடும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பற்று, 3 ஆண்டுகள் கடந்தும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை.இந்நிலையில், கடந்த மே மாதம், இத்திட்டத்திற்கு, 2024-25 ம் ஆண்டிற்கு, 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் கூடுதல் வீடுகள் கிடைக்கும் என்ற நம்பிககையில, தற்போது மீண்டும் கணக்கெடுப்பு நடத்தி, விடுபட்ட வீடுகளையும், சேர்த்து, ஊராட்சி தலைவர்கள் பட்டியல் கொடுத்தனர். இதில் தேர்வு செய்யப்படும் பயனாளியின் வீட்டின் முன், பயனாளி, ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர், பி.டி.ஓ., ஆகியோர் நின்று புகைக்கபடத்துடன் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அந்த பணியையும் முடித்து, வீடு ஒதுக்கீடு உத்தரவுக்காக பொதுமக்களும், ஊராட்சி தலைவர்களும் காத்திருந்தனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் வீடு ஒதுக்கீடு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது. அதில், கடலுார் மாவட்டத்திற்கு வெறும் 3,100 வீடுகள் மட்டுமே முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளில், ஒவ்வொரு ஊராட்சிக்கும் தோராயமாக 4 முதல் 6 வீடுகள் மட்டுமே ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சில ஊராட்சிகளில் 3 வீடுகளும், பெரிய ஊராட்சிகளில் 10 வீடுகளும் ஒதுக்க முடியும். இதனால் 3 ஆண்டுகளாக வீடுகள் கட்டாமல் காத்திருந்த பயனாளிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இதனால், மாவட்டம் முழுவதும், வீடு கிடைக்காதவர்கள் ஊராட்சி தலைவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில், ஊராட்சி தலைவர்கள் தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, கடலுார் மாவட்டத்திற்கு கூடுதல் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.