| ADDED : மார் 17, 2024 12:06 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி., கையகப்படுத்திய நிலங்களை சமன்படுத்தும் பணியை, நிறுத்தக்கோரி சிதம்பரம் சப் கலெக்டர் ராஷிராணியிடம், விவசாயிகள் மனு அளித்தனர்.நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம், கடந்த 2000 ஆண்டு முதல் 2009, 2015 ஆம் ஆண்டு வரை நிலங்களை ஏக்கருக்கு 5 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரையில் குறைவான தொகை கொடுத்து கையகப்படுத்தியது. தற்போது ஏக்கர் 25 லட்சம் வழங்க மத்திய அரசு புதிய குடியமர்வு திட்டத்தில் உயர்த்தியுள்ளது.கடந்த காலங்களில் நிலம் கொடுத்த கம்மாபுரம், ஊ.ஆதனுார், சாத்தப்பாடி உள்ளிட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து விவசாய கூட்டமைப்பு சார்பில், சிதம்பரம் சப்கலெக்டர் ராஷிராணியை நேரில் சந்தித்து வாழ்வாதாரம் மாற்று குடியிருப்பு, உயர் இழப்பீட்டு தொகை வழங்கிய பிறகு, நிலங்களை சமன் படுத்தும் பணியை என்.எல்.சி., மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.இது தொடர்பாக, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் திடீரென என்.எல்.சி., நிறுவனம் நிலங்களை சமன்படுத்தும் பணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கொண்டது. இதை, விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், நேற்று விவசாயிகள் ஒன்றிணைந்து, சிதம்பரம் சப்கலெக்டர் ராஷிராணியை சந்தித்து மனு கொடுத்து, வாழ்வாதாரம் வழங்கிய பின்பு நிலங்களை சமன்படுத்தும் பணியை என்.எல்.சி., மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.