| ADDED : பிப் 13, 2024 04:39 AM
கடலுார்: குறைகேட்பு கூட்டத்தில் சில்லரை காசுடன் கலெக்டரிடம் மாற்றுத்திறனாளி மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர குறை தீர்வு கூட்டம் நடந்தது. பொதுமக்களிடம், கலெக்டர் அருண்தம்புராஜ் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது, வரிசையில் வந்த கடலுார் அடுத்த எம்.புதுாரை சேர்ந்த மாற்றுத்திறனாளி, சிவபாலன்,35; சில்லரை காசுகளுடன் மனு ஒன்றை அளித்தார். அதிர்ச்சியடைந்த கலெக்டர், மனு அளித்தவரிடம் விசாரித்தார். அவர், 'மாற்றுத்திறனாளியான தான், ராசாக்குப்பத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறேன். அரசின் மூன்று சக்கர பைக் கேட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தேன். அதிகாரிகள் லஞ்சம் கேட்டு எனது மனுக்களை நிராகரித்து வருகின்றனர். தாங்கள் நடவடிக்கை எடுத்து, மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்க வேண்டும்' என கோரினார்.மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவரை அனுப்பி வைத்தார்.அதிகாரிகள் லஞ்சம் கேட்பதை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டுவர, சில்லரை காசுகளுடன் வந்து மனு அளித்ததாக சிவபாலன் கூறினார்.