உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கடலுார் பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கடலுார்: கடலுார் பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு பழக்கடைகளை அகற்றியபோது, மாநகராட்சி அதிகாரிகளுடன், வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் மாநகராட்சி பஸ் நிலையத்தில், இருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ் நிலைய வளாகத்திற்குள் மாநகராட்சி சார்பில், 146 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இங்குள்ள நடைபாதையை ஆக்கிரமித்து ஏராளாமானோர் கடைகள் வைத்துள்ளனர். இதனால், பஸ் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதையடுத்து, நடைபாதை கடைகளை கடந்த ஏப்., மாதம் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஆனால், சில தினங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்தது. இந்நிலையில் பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் 15க்கும் மேற்பட்ட நடைபாதை பழக்கடைகள் இருந்து வந்தது.இந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கடைகளில் இருந்த பழங்களை குப்பை அள்ளும் லாரியில் ஏற்றினர். இதனால், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது, வியாபாரிகள், 'எங்கள் வாழ்வாதாரமே இது தான். நாங்கள் பஸ் நிலையத்தில் சாராயம் விற்கவில்லை, கஞ்சா விற்கவில்லை. எங்கள் வாழ்வாதத்தை அழித்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைவிட தவிர வேறு வழியில்லை' என்றனர். அப்போது, அங்கிருந்த ஒரு பெண் வியாபாரி பாட்டிலை எடுத்துக் கொண்டு பெட்ரோலை தேடி அலைந்தார்.தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து காவல் துறையிடம் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டனர்.அதற்கு, கலெக்டர் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் தெரிவிக்காமல் வந்து ஆக்கிரமிப்பு அகற்றும்போது அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு என்று போலீசார் கேள்வி எழுப்பினர்.இதையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்றுவதை நிறுத்திவிட்டு பறிமுதல் செய்த பழங்களை மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை