| ADDED : நவ 18, 2025 06:48 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மூதாட்டியிடம் வழி கேட்பதுபோல செயினை பறித்து, காதுகளை அறுத்து கம்மல் திருடிச் சென்ற இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த எம்.பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் காசிராவ் மனைவி கவிதா, 50; கடந்த 5ம் தேதி பகல் 1:00 மணியளவில், மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர், கோவிலுக்கு செல்ல வழி கேட்டனர். கவிதா வழி கூறியபோது, அவர் அணிந்திருந்த 4 சவரன் தாலிசெயினை பறித்த மர்ம நபர்கள், காதுகளில் இருந்து 1 சவரன் கம்மலை பறித்து தப்பிச் சென்றனர். இதில், கவிதாவின் காதுகள் அறுந்து பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் கவிதா சிகிச்சை பெற்றார். இது குறித்த அவரது புகாரின் பேரில், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, தொட்டிகுப்பம், ராசாபாளையம் வழியாக உள்ள சி.சி.டி.வி., காட்சிப் பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர். அதில், செயின் பறிப்பில் ஈடுபட்டது கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த மையனுார், காட்டுக்கொட்டாய் எலியாஸ் மகன் அந்தோணி ஆரோக்யராஜ், 24, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.