உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஸ்கேட்டிங் ஹாக்கியில் அசத்தும் சகோதரிகள்: அரசு உதவி கிடைக்குமா?

 ஸ்கேட்டிங் ஹாக்கியில் அசத்தும் சகோதரிகள்: அரசு உதவி கிடைக்குமா?

கடலுார் மாவட்டத்தில் ஸ்கேட்டிங் ஹாக்கியில், 3 சகோதரிகள், பல்வேறு பதக்கங்களை குவித்து வருகின்றனர். நெல்லிக்குப்பம் ராமு தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர். தனியார் சர்க்கரை ஆலை ஒப்பந்ததாரர். இவரது மனைவி லல்லி. இந்த தம்பதியின் மகள்கள், நிஷாந்தினி,14 மற்றும் இரட்டையர்கள் சஞ்சனா மற்றும் ஷாலினி,10; இதில், நிஷாந்தினி 10ம் வகுப்பும், சஞ்சனா மற்றும் ஷாலினி ஆகிய இருவரும், 5ம் வகுப்பும் வெள்ளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். நிஷாந்தினி சிறு வயது முதலே 'ஸ்கேட்டிங்'கில் ஆர்வமாக இருந்தார். அதில், நன்கு தேர்ச்சி பெற்ற பிறகு ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் விளையாட துவங்கினார். இதுவரை, 6 முறை தமிழக அணியில் இருந்து தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்றுள்ளார். விசாகபட்டினத்தில் அடுத்த வாரம் நடக்கும் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் 11 வயது முதல் 14 வயது வரையிலான பிரிவில் கலந்து கொள்கிறார். இவரது தங்கைகள் சஞ்சனா,ஷாலினி இருவரும் நிஷாந்தினி விளையாடுவதை பார்த்து அவர்களும் ஸ்கேட்டிங் ஹாக்கி விளையாட துவங்கி தற்போது தேசிய போட்டியில் விளையாட காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். இதுகுறித்து அவர்களது பெற்றோர் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் ஸ்கேட்டிங் ஹாக்கி பயிற்சிக்கான மைதானம் வசதியில்லை. வடலுாரில் தனியார் டாக்டர் வைத்துள்ள மைதானத்திலேயே பயிற்சி எடுக்கிறோம். பயிற்சியாளர் நடராஜன் பயிற்சி அளிக்கிறார். நெல்லிக்குப்பத்தில் இருந்து வடலுார் சென்று வர நேரம் விரையமாவதோடு பணமும் செலவாகிறது . தமிழக அரசு இதுபோன்ற மாணவர்களை ஊக்குவிக்க கடலுாரில் மைதானம் வசதியை ஏற்படுத்த வேண்டும். ஒரு பெண்ணுக்கு ஸ்கேட்டிங் சக்கரம், ஹாக்கி பேட் மற்றும் பிரத்யேக உடைகள் என, 1 லட்சம் ரூபாய் செலவாகிறது. இதனை வாங்க முடியாததால் நிஷாந்தினியை மட்டும் விசாகப்பட்டினம் அனுப்புகிறோம். தமிழக அரசு இதுபோன்ற மாணவிகளுக்கு உபகரணங்கள் வாங்க உதவ வேண்டும். சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதே என் மகள்களின் லட்சியம். இது மட்டுமல்லாமல் மூவரும் கராத்தே, சிலம்பம், யோகா என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, 100 க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளனர் என கூறினர். தமிழக அரசு உதவி செய்தால் மேலும் சாதிக்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி