உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒரே வாரத்தில் 3 மீனவர்களை காவு வாங்கிய முகத்துவாரம்

ஒரே வாரத்தில் 3 மீனவர்களை காவு வாங்கிய முகத்துவாரம்

பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடற்கரையோர கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, பரங்கிப்பேட்டை, சின்னுார், கிள்ளை, முடசல் ஓடை உட்பட 30க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் படகில் கடலுக்கு மீன் பிடிக்க வெள்ளாற்று முகத்துவாரம் வழியாக சென்று வருகின்றனர். வெள்ளாற்று முகத்துவாரம் கடந்த பத்து ஆண்டிற்கு மேலாக அடிக்கடி துார்ந்துபோய்விடுவதால், மீனவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு சார்பில், முகத்துவாரத்தை ஆழப்படுத்தி தருவது வழக்கமாக உள்ளது. இருந்தும், மீனவர்கள் கடலில் மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பி வரும்போது முகத்துவாரத்தில் படகுகள் சிக்கி விபத்துக்குள்ளாவது அடிக்கடி நடந்து வருகிறது.இதுப்போன்ற விபத்துகளில் 20க்கும் மேற்பட்டவர்கள் லேசான காயங்களுடன், தப்பி வந்தனர். இந்நிலையில், கிள்ளை முடசல் ஓடை, சின்னவாய்க்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பி வரும்போது வெள்ளாற்று முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில், கடந்த 12ம் தேதி கிள்ளை சி.மானம்பாடி சுரேந்திரன், 19ம் தேதி கிள்ளை சின்னவாய்க்கால் மீனவசெல்வம், தயாளமூர்த்தி என கடந்த ஒரு வாரத்தில் 3 பேர் இறந்துபோய் உள்ளனர். இச்சம்பவங்களால் மீனவ கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். படகுகள் விபத்துக்குள்ளாவதை தடுக்க வெளாற்று முகத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்தித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடற்கரையோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ