சிதம்பரம்: கடலுார் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக வீராணம் ஏரி, முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தாண்டில், 5வது முறையாக நிரம்பியுள்ளது. கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் வரலாற்று சிறப்பு மிக்க வீராணம் ஏரி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வரும் நீர், கீழணையில் தேக்கப்பட்டு மீண்டும் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு திறந்துவிடப்படுகிறது . இந்த ஏரியின் மூலம் விவசாயம் மற்றும் சென்னை மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஏரியின் மூலம் காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, சிறகிழந்த நல்லுார், திருநாரையூர், எல்லேரி, மானிய ஆடூர், லால்பேட்டை உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. கடலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பரவலான மழை பெய்து வந்தது. குறிப்பாக வீராணம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த, 20 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. ஏரியின் மொத்த கொள்ளவான, 1,465 மில்லியன் கன அடி தண்ணீரில், 900 மில்லியன் கன அடியாக இருந்த ஏரியின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்தது. செங்கால் , கருவாட்டு ஓடைகள் வழியாக, 1800 கன அடி தண்ணீர் ஏரிக்குள் வந்ததால், கடந்த இரு நாட்களுக்கு முன்பு நீர் இருப்பு, 1,380 கன அடியாக உயர்ந்தது. இதனால், இந்த ஆண்டில், 5வது முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளவை எட்டியுள்ளது. அதனை தொடர்ந்து, 2 நாட்கள் மழை விட்ட நிலையில், நேற்று மீண்டும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, புயல் சின்னம் உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. இந்நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னையின் குடிநீர் தேவைக்கு, 73 கன அடி அனுப்பப்படுகிறது. வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக மழை பொழிவு ஏற்படுமாயின் ஏரியின் கொள்ளளவில் இருந்து தண்ணீர் இருப்பை குறைக்க முடியுமா என பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.