| ADDED : ஜூலை 14, 2011 11:45 PM
அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே சீரான குடிநீர் விநியோகம் இல்லாமல், பெண்கள் குடிநீருக்கு பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பூதநத்தம் பஞ்சாயத்தில், 1,500க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. ஆனால், இதிலிருந்து வரும் குடிநீர் அக்கிராம மக்களுக்கு போதுமானதாக இல்லை. 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் கிடைக்கும் தண்ணீர் மக்கள் தேவையை பூர்த்தி செய்யும் அளவு இல்லை. இக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கீழ்வீதியில் வசிக்கும் பொதுமக்கள், குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக, குடிநீர் சீரான முறையில் விநியோகம் செய்யப்படவில்லை. குடிநீருக்காக பெண்கள் குடங்களை, குழாய்கள் முன் போட்டு வைத்து நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். குடிநீர் கிடைக்காமல், அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள திறந்த வெளி கிணறுகளில் தண்ணீர் எடுத்து வந்து, பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டவும், தற்காலிகமாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம், குடிநீர் சீராக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.