தர்மபுரி: நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், தர்மபுரி மாவட்டத்தில், 5 அரசு பள்ளிகள் மற்றும் 29 தனியார் பள்ளி மாணவ, மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 108 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும், 86 தனியார் பள்ளிகள் என மொத்தம், 194 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், 18,416 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 17,228 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம், 93.55 சதவீதம். இதில், தர்மபுரியிலுள்ள அரசு மாதிரி பள்ளி, காரிமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பேகாரஹள்ளி மேல்நிலைப்பள்ளி, நத்தமேடு, நரிப்பள்ளி உள்ளிட்ட, 5 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தனியார் பள்ளிகளில், தர்மபுரி மற்றும் அதியமான்கோட்டையிலுள்ள செந்தில் மெட்ரிக் பள்ளி, தர்மபுரி விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மற்றும் சோலைக்கொட்டாய் ராமதாசு மேல்நிலைப்பள்ளி உட்பட, 29 தனியார் பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகள் அளவிலான தேர்ச்சி விகிதத்தில், தர்மபுரி மாவட்டம் கடந்தாண்டு, 24வது இடத்தில் இருந்தது. நடப்பாண்டில், 21ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.