உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வனத்தில் மக்களுடன் மோதிய வனத்துறையினர் அத்துமீறிய குடியிருப்பு அகற்றும் விவகாரத்தில் பகீர்

வனத்தில் மக்களுடன் மோதிய வனத்துறையினர் அத்துமீறிய குடியிருப்பு அகற்றும் விவகாரத்தில் பகீர்

ஒகேனக்கல் : ஒகேனக்கல் அருகே, வனப்பகுதியில் அத்துமீறிய குடியிருப்பை அகற்றும் விவகாரத்தில், குடியிருப்புவாசிகள், வனத்துறையினர் இடையே மோதல் ஏற்பட்டது.தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதிக்கு உட்பட்ட பேவனுார் காப்புக்காட்டில், வேப்பமரத்து கொம்பு கிராமம் உள்ளது. இங்கு, 15க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்கள் மூன்று தலைமுறையாக வசிக்கின்றனர். இவர்களை வனத்தில் இருந்து வெளியேறுமாறு வனத்துறையினர் பலமுறை அறிவுறுத்தினர். மேலும், வருவாய் துறை சார்பில், வேறிடத்தில் இலவச வீட்டுமனை பட்டா கொடுப்பதாக அறிவித்தனர். ஒகேனக்கல் ஊட்டமலை ஒட்டிய பகுதியில், பட்டா கேட்ட நிலையில், இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணனுக்கு, வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை காலி செய்ய நோட்டீஸ் கொடுத்தனர். இதை தொடர்ந்து பென்னாகரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர், ஒகேனக்கல் போலீசார், 9ம் தேதி சென்று, கிருஷ்ணன் வீட்டை அகற்ற முயன்றனர். குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது உமா மகேஸ்வரி என்பவர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். அதேசமயம் தள்ளுமுள்ளுவில் உமாமகேஸ்வரி, 32, சிவசங்கரி, 21, சுகுணா, 20 ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை எம்.எல்.ஏ.,க்கள் பென்னாகரம் ஜி.கே.மணி, தர்மபுரி வெங்கடேஷ்வரன் சந்தித்து ஆறுதல் கூறினர்.இதுகுறித்து பென்னாகரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது:வனத்தில் அத்துமீறி ஆக்கிரமித்து, சிறு தகரகொட்டாய் மற்றும் வீடு அமைத்திருந்த கிருஷ்ணனை, வனப்பகுதியை விட்டு வெளியேறுமாறு, 2021 முதல் மூன்று முறை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. கடந்த, 2ம் தேதியும் நோட்டீஸ் தரப்பட்ட நிலையில், வனத்துறையினர், ஒகேனக்கல் போலீசார் மற்றும் வருவாய்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றினர். கிருஷ்ணன் பூர்வக்குடி அல்ல. அவருக்கு பென்னாகரம் சார்பதிவாளர் வழங்கிய ஆவணங்கள் படி, அஜ்ஜனஅள்ளியில் விவசாய நிலம், கூத்தப்பாடி கிராமத்தில், நத்தம் பிரிவில் காலி மனை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி