ஒகேனக்கல்:கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரி நீர் குறைப்பால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 53,000 கன அடியாக சரிந்துள்ளது.கர்நாடக, கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான மைசூர், மாண்டியா, குடகு, ஹாசன், வயநாடு, உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகவிலுள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை பாதுகாப்பு கருதி, தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது நீர்வரத்துக்கு ஏற்ப அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இரு தினங்களுக்கு முன், கர்நாடக அணைகளில் இருந்து, 69,395 கனஅடி திறக்கப்பட்ட நிலையில், நேற்று கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 13,542 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 43,327 கன அடி என மொத்தம், 56,869 கன அடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 80,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 53,000 கன அடியாக சரிந்தது.நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் காவிரியாற்றில் பாறைகளை மூழ்கடித்தபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. மெயின் அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.தொடர்ந்து, 8வது நாளாக காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்கிறது. வருவாய் துறையினர், போலீசார், ஊரக வளர்ச்சி மற்றும் தீயணைப்பு துறையினர் கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.