உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாறைகள் படர்ந்த சனத்குமார் நதி

பாறைகள் படர்ந்த சனத்குமார் நதி

தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் சனத்குமார் நதி மண் வளங்கள் சுரண்டல் காரணமாக பள்ளதாக்காக மாறி போனது. இதனால், சனத்குமார் நதி பாய்ந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.தர்மபுரி மாவட்டத்தில் சின்னாறு, சனத்குமார் நதி மற்றும் தென்பெண்ணை ஆறு ஆகிய முக்கிய ஆறுகள் மூலமாக நீர் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஆற்றுபடுகை பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் கடந்த காலங்களில் கொடி கட்டி பறந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியில் உருவாகும் சனத்குமார் நதி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வழியாக தர்மபுரி, வகுத்தம்பட்டி, கம்பைநல்லூர் வழியாக செல்கிறது. இந்த நதியின் மூலம் தர்மபுரி, கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி ஆண்டு முழுவதும் விவசாயம் செழிப்படைந்து இருந்தது.சனத்குமார் நதி பாயும் பல இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டதாலும், போதிய மழையில்லாமை காரணமாகவும் தண்ணீர் வருகை குறைந்து போனது. தற்போது, வட கிழக்கு பருவமழைக்காலங்களில் மட்டும் சனத்குமார் நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதை பார்க்க முடியும்.அதுவும் கடந்த சில ஆண்டாய் தண்ணீர் வருகை குறைந்துள்ளது. நதி பெருக்கெடுத்து வரும் பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து நீர் வழிப்பாதைகள் அனைத்து அடைக்கப்பட்டு விட்டன. சனத்குமார் நதி நீரை தேக்கி விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் கம்பைநல்லூரில் அணை கட்டப்பட்டுள்ளது.இந்த அணை மூலம் 114 ஏக்கர் பாசன பகுதியும், இந்த அணையில் இருந்து உபரி நீர் திறக்கும் காலங்களில் கம்பைநல்லூர் தலாவ் ஏரி நிரம்பி அந்த பகுதியில் உள்ள 114 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்ற வந்தது. கடந்த சில ஆண்டாய் அணை நிரம்புவதும், ஏரி நிரம்புவதும் கேள்விக்குறியாகி போனது.கடந்த காலங்களில் சனத்குமார் நதியில் 20 அடிக்கு மணல் படர்ந்து மணல் பரப்பாய் இருந்தது. கம்பைநல்லூர் வாசிகள் மாலை நேரங்களில் சனத்குமார் நதி ஆற்று மணலில் கால்நாடையாக சென்று அணை பகுதியில் ஓய்வு எடுத்து திரும்புவார்கள். கடந்த 10 ஆண்டுகளில் கம்பைநல்லூர் சனத்குமார் ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து மணல் பல்வேறு தேவைக்கு சுரண்டப்பட்டு தற்போது, பள்ளத்தாக்காக மாறியும் பல இடங்களில் பாறைகள் மட்டும் எஞ்சியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆற்றுப்படுகை பகுதியில் மண் வளங்கள் சுரண்டப்பட்டதால், நிலத்தடி நீர் மட்டம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆற்றுப்படுகை பகுதியில் கூட விவசாயிகள் கம்பைநல்லூர் பகுதியில் 800 அடிக்கு போர் போட்டு விவசாய தேவைக்கான நீர் வளத்தை பெற்று வருகின்றனர்.பருவ மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் ஆற்று நீரில் மண் வளமும் சேர்ந்தாலும், அடுத்த சில மாதங்கள் தண்ணீர் வற்றியவுடன் வழக்கம் போல் மண் சுரண்டல் தொழில் சுறுசுறுப்படைந்து விடும். இதனால், கம்பைநல்லூர் சனத்குமார் நதி பெரும் பள்ளத்தாக்காகி வரும் ஆண்டுகளில் நிலத்தடி நீர் சேமிப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை