பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பையர்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து குடும்ப சூழ்நிலை, வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 17 மாணவ, மாணவியர் பள்ளி படிப்பை விட்டு, இடை நின்றது கண்டறியப்பட்டது. அவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசி, மீண்டும் படிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் பிரபாவதி, பி.டி.ஓ., பழனி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா, ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ., குப்புசாமி, ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் விளக்கினர். அதன்படி அவர்கள் பையர்நத்தம், கதிரிபுரம், போதக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இடைநின்ற மாணவர்களை தேடி அவர்களின் வீடுகளுக்கு சென்று மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்தனர். அப்போது பையர்நத்தம் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து இடைநின்ற தேவேந்திரன் என்ற மாணவர் வறுமையால், பள்ளி இடை நின்றது தெரியவந்தது. அம் மாணவரின் பெற்றோரிடம் பேசி, உடனடியாக நேற்று பையர்நத்தம் அரசு பள்ளியில் மீண்டும், 10ம் வகுப்பு சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்தனர். மேலும், பள்ளியை விட்டு இடை நின்ற மாணவர்களை, அதிகாரிகள் வீடு தேடி சென்று கண்டறிந்து பள்ளியில் சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.