தர்மபுரி: நிலக்கடலை சாகுபடி செய்யும், விவசாய நிலங்களில், எலி தொல்லையை போக்க, விஷ மருந்துகளை பயன்படுத்தாமல், எளிய முறையில், கட்டுப்படுத்தும் முறைகளை, விவசாயிகள் கையாண்டு வருகின்றனர்.தர்மபுரி மாவட்டத்தில், ராபி பருவ கார்த்திகை பட்டத்தில், மாவட்டம் முழுவதும், 5,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். இன்னும், ஒரு மாதத்தில் நிலக்கடலை அறுவடைக்கு வர உள்ளது. காரிப்பருவத்தை விட, ராபி பருவத்தில் குறைந்த அளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. கார்த்திகை பட்டத்தில், சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை அதிகளவில் மகசூல் தரக்கூடியது. இதனால், விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடி செய்கின்றனர்.இந்நிலையில், விவசாயிகளுக்கு மிகப்பெரிய சவாலாக, எலி தொல்லை உள்ளது. இதை கட்டுப்படுத்த, விஷ மருந்துகள், விஷ மாத்திரைகள் உள்ளிட்டவற்றை, வயல்களில் எலிகளை கொல்ல வைக்கின்றனர். அவற்றை, கால்நடைகள், வீட்டு விலங்குகள், பறவைகள், வனவிலங்குகள் உள்ளிட்டவை தெரியாமல் உண்பதால் இறக்க நேரிடுகிறது.விஷ மருந்து, மாத்திரைகளின்றி, நிலக்கடலையில் எலி தொல்லையை கட்டுப்படுத்த, நல்லம்பள்ளி அருகே விவசாயி ஒருவர், புதிய முயற்சியை கையாண்டு வருகிறார். விவசாய நிலங்களை சுற்றி, குச்சிகளை நட்டு, அதில் வெள்ளை நிற பைகள் அல்லது பாலித்தீன் கவர்கள் உள்ளிட்டவற்றை கட்டி வைத்தால், அதை காணும் எலிகள் வயல்களுக்கு வருவதில்லை. இந்த நடவடிக்கையில், ஓரளவு எலிகளை கட்டுப்படுத்த முடிகிறது என, அவர் கூறுகிறார்.