பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த போதக்காட்டில், மீனாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால், ஆபத்தான நிலையில், ஆற்று நீரை கடந்து கிராம மக்கள் சென்று வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த போதக்காடு ஊராட்சியில், கரியதாதனுார், மாரியம்மன் கோவிலுார், போதக்காடு, முல்லை நகர் ஆகிய, 4 குக்கிராமங்கள் உள்ளன. ஏற்காடு மலையின் பின்புறத்தில் அமைந்துள்ள இப்பகுதியில், 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மாரியம்மன் கோவிலுாரில் மட்டும், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஏற்காடு மலையில் உற்பத்தியாகும் மீனாறு, இக்கிராமத்தின் நடுவே செல்கிறது. ஆற்றின் மறுகரையில் ஏற்காடு மலையடிவாரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க, ஆற்றை கடந்து பையர்நத்தம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடிக்கு வர வேண்டும்.இந்த ஆற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது, ஆற்றை கடக்க முடியாமல் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் விவசாயிகள் வீட்டிலேயே முடங்கி தவிக்கின்றனர். இப்பகுதி மக்கள் மீனாற்றின் குறுக்கே பாலம் கட்ட வலியுறுத்தி, அதிகாரிகள் முதல் மக்கள் பிரதிநிதிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. நேற்று, இப் பகுதியில், 30 மி.மீ., மழை பெய்தால், ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றை கடக்க கிராம மக்கள் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். எனவே, மீனாற்றின் குறுக்கே பாலம் கட்ட, அரசு நடவடிக்கை எடுக்க மலைவாழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.