உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இதுவும் நல்லாயிருக்கே: விவசாய பணிகளுக்கு 100 நாள் பணியாளர்கள்: நடவடிக்கை எடுக்கலாமே மாவட்ட நிர்வாகம்

இதுவும் நல்லாயிருக்கே: விவசாய பணிகளுக்கு 100 நாள் பணியாளர்கள்: நடவடிக்கை எடுக்கலாமே மாவட்ட நிர்வாகம்

வேடசந்தூர்: நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு தின கூலியாக ரூ.319 அறிவித்துள்ள நிலையில் இதன்பணியாளர்களை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டுக்கல் மாவட்டத்தில் 100 நாள் வேலை காரணமாக பெரும்பாலான விவசாய ஆண், பெண் தொழிலாளர்கள் 100 நாள் வேலைக்கு செல்வதால் விவசாய வேலைகளுக்கு கூலி ஆட்கள் இன்றி விவசாயம் பொய்த்துப் போய் உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் முருங்கை ,தென்னை விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்புக்கும் மாறிவிட்டனர். இதனால் உணவு உற்பத்தி குறைந்து விலைவாசி உயர்ந்துள்ளது. நல்ல அரிசி கிலோ ரூ.70 , காய்கள் ஒரு கிலோ குறைந்தது ரூ.40 முதல் ரூ.60 க்கு விற்கிறது. இதனால் சாதாரண மக்களுக்கு, உணவு பிரச்னையே பெரும் பிரச்னையாக மாறி வருகிறது. இதை கருத்தில் கொண்டு தற்போது நல்ல மழை பெய்யத் துவங்கியுள்ள நிலையில் விவசாய தொழில்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. இதன் முதல் கட்டமாக 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாயப் பணிகளுக்கு அழைத்துச் செல்லலாம் என்ற அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 100 நாள் பணியாளர்களுக்கு ஊராட்சி பகுதி சம்பளத்துடன் விவசாய சம்பளம் என ரூ.320 கொடுக்கலாம். இதனால் விவசாயமும் செழிக்கும். விலைவாசி குறையும். அரசுக்கும் விவசாயிக்கும் கொடுக்கின்ற கூலி குறையும். மாவட்ட நிர்வாகம் யோசித்து நல்ல முடிவை எடுத்து ஜூன் முதல் செயல்படுத்த வேண்டும்........விவசாயம் காக்க இதுவே வழி 100 நாள் வேலை திட்ட சம்பளமாக 319 அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேலும் இவ்வளவு சம்பளத்தை கொடுத்து பணியாளர்களை வெறுமனே உட்கார வைப்பது நியாயம் இல்லை. 100 நாள் வேலை திட்டம் காரணமாக விவசாயம் பாழ்பட்டு போய்விட்டது. கூலி ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் தங்களது நிலங்களை வெறுமனே போட்டுள்ளனர். விவசாய உற்பத்தியை உயர்த்த ,விலைவாசியை குறைக்க வேண்டும் என்றால் வேண்டும் அதற்கு ஒரே வழி 100 நாள் வேலை பணியாளர்களை ஊராட்சி வாரியாக விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கான கூலியில் ஊராட்சி நிர்வாகம் பகுதி, விவசாயிகள் பகுதியும் சேர்ந்து தரலாம். அப்போதுதான் விவசாயத்தை காப்பாற்ற முடியும். இதை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் முன்னோடி திட்டமாக கருத்தில் கொண்டு மாநில அளவில் முதல் முறையாக இங்கு செயல்படுத்த வேண்டும்.ஆர்.எம்.நடராஜன், தமிழக விவசாயிகள் முன்னேற்ற சங்கம் இளைஞரணி தலைவர், வேடசந்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை