திண்டுக்கல் : 'பிளஸ் 2வுக்கு பின் உயர்கல்வி படிப்புகளை தேர்வு செய்யும்போது கல்லுாரிகளும் தரமான கட்டமைப்புகளை கொண்டுள்ளனவா என்பதை பெற்றோர் ஆராய்ந்து தேர்வு செய்யுங்கள்' எனதிண்டுக்கல்லில் தினமலர், கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய வழிகாட்டி நிறைவு நாள் நிகழ்ச்சியில் நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர். அனைத்து துறைக்கும் தேவை அனிமேஷன்
'மீடியா, அனிமேஷன், வி.எப்.எக்ஸ்., அண்ட் கேமிங்' குறித்து மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசிரியர் கிேஷார் குமார் பேசியதாவது:கல்வி உட்பட அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. எந்த விஷயங்களையும் விஷூவலாக பார்க்கும் போது அதுதொடர்பாக நன்கு புரிதல் ஏற்படும். தற்போது சிறிய கடைகளுக்கு கூட பிரான்டிங், விளம்பரம் தேவைப்படுகிறது. கிரியேட்டிவ் திறமை உள்ளவர்கள் கிராபிக்ஸ் அனிமேஷன், விஷூவல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட படிப்புகளை தேர்வு செய்யலாம். 2டி, 3டி அனிமேஷன், கிராபிக் டிசைன்ஸ், விர்ஜூவல் ரியாலிட்டி என அடுத்த கட்ட தொழில்நுட்பங்கள் தற்போது வந்துவிட்டன. மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இத்தொழில்நுட்பம் தேவை. இப்படிப்பிற்கு மாணவர்களுக்கு கற்பனைத் திறன் மிக அவசியம். வி.எப்.எக்ஸ் அண்ட் கேமிங் தொழில்நுட்பத்திற்கும் தேவை அதிகரித்துள்ளது. கிரியேட்டிவ் சிந்தனைகள் இருக்கும் மாணவர்களுக்கு இத்துறை நல்ல எதிர்காலத்தை தரும். பத்திரிகை, மீடியா, சினிமா, தொலைக்காட்சி தயாரிப்பு, இணையதளம் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. சிறந்த பாடத்திட்டம், உரிய பல்கலை அனுமதி பெற்றுள்ளதா என்பதை பெற்றோர் உறுதிசெய்துகொள்ள வேண்டும். பொறியியல் எதிர்காலம்
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி பேராசிரியர் முருகராஜன் பேசியதாவது:படிப்பை தேர்வு செய்வதற்கு முன் உங்கள் 'கரியர்' என்னவாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். வேலை என்பதை 'கரியருக்கான' நுழைவு வாயிலாக எடுத்துக்கொள்ள வேண்டும். எதிர்கால தொழில்நுட்பங்கள் என்னவாக இருக்கும், தொழில் நிறுவனங்களுக்கு தேவையானதிறமைகள் என்ன என அறிந்து அதற்கேற்ப படிப்புகளை இப்போது தேர்வு செய்ய வேண்டும்.பொறியியல் படிக்க விரும்பினால் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து தொடர்கற்றல் அவசியம். உங்கள் திறமையை அறிந்து விரும்பிய பிரிவை தேர்வு செய்யுங்கள்.கோர் இன்ஜினியரிங் படிப்புகள் 10 ஆண்டுகளாகவே ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. ஆனாலும் வேலைவாய்ப்புகள் குறைவதில்லை. நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். மெக்கானிக்கல் இன்ஜி., படித்தாலும் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமேஷன், கம்ப்யூட்டிங் உள்ளிட்டவற்றிலும் திறமைகள் வேண்டும். அப்போது தான் அனைத்து துறைகளின் அனுபவம் கிடைக்கும். இந்த அனுபவம் வேலைவாய்ப்புக்கு கூடுதல் பலமாக இருக்கும். நிறுவனங்களில் நிலவும் பிரச்னைகளை தீர்ப்பதில் பல்திறன் அணுகுமுறை தற்போது அவசியமாகிறது. உரிய அனுமதி பெற்றுள்ளதா, எதிர்காலத்திற்கு ஏற்ற பாடத்திட்டம், கட்டமைப்புகள், முந்தைய ஆண்டுகளின் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் விவரம் ஆகியவற்றை தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். சுகாதார அறிவியல் வாய்ப்புகள்
பேராசிரியர் வி.பி.ஆர்.சிவக்குமார் பேசியதாவது:சரியான நேரத்தில் சரியான படிப்பை தேர்வு செய்து படிப்பது தான் எதிர்கால வெற்றிக்கு அடித்தளம். மருத்துவ படிப்புகளை தாண்டி சுகாதார அறிவியல் படிப்புகள் ஏராளமாக உள்ளன. இவற்றில் பல் மருத்துவம், நர்சிங், பிஸியோதெரபி படிப்பு, ஆக்குபேஷனல் தெரபி, பார்மஸி மற்றும் அதற்கு இணையான ஆக்சிடென்ட் அண்ட் எமர்ஜென்ஸி டெக்., ஹார்டியாக் கேர் டிரைனிங், கிளினிக்கல் சைக்காலஜி, மெடிக்கல் லேபரட்டரி டெக்., ஆடியோ ஸ்பீச், அனஸ்தீசியாஸ் டெக்., மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ் என 40க்கும் மேற்பட்டவை உள்ளன. இப்படிப்புகளை தரும் கல்வி நிறுவனங்கள் மருத்துவ கல்லுாரிகளுடன் இணைந்துள்ளனவா, உரிய கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு சென்று அங்கு படிக்கும் மாணவர்களிடம், பேராசிரியர்களிடம் விபரம் கேட்டு கல்லுாரிகளின் தரம், வசதிகளை அறிதுகொள்ளுங்கள். இப்படிப்புகள் மூலம் அரசு, தனியார் மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் ஏராள வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. படிப்புகளை தேர்வு செய்யும் முன் படிக்க வேண்டிய படிப்புகள், கல்லுாரிகளை பட்டியலிட்டு மாணவர், பெற்றோர் கலந்து பேசி முடிவு எடுங்கள். தொழில்நுட்பங்களுக்குஏற்ற திறன்கள் அவசியம்
அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பேராசிரியர் பி.பாபு பேசியதாவது: தொழில்நுட்பங்கள் மாறிக்கொண்டே வருகின்றன. அதற்கு ஏற்ப தங்களை அப்டேட் செய்துகொள்வது அவசியமாகிறது. அந்த வகையில் ஏ.ஐ., தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. கணிதத்தில் திறன் நன்கு உள்ள மாணவர்கள் தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளை தாராளமாக தேர்வு செய்யலாம். மனிதர்களை போல் ரோபோக்களை சிந்திக்க வைக்கும் ஏ.ஐ., தொழில்நுட்பம், சரியான முடிவுகளை அறிய உதவும் டேட்டா சயின்ஸ் போன்ற படிப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. கம்ப்யூட்டர் ஆர்க்கிடக்சர், கம்ப்யூட்டேஷன் சயின்ஸ், சாப்ட்வேர் இன்ஜி., உள்ளிட்ட பிரிவுகளும், தகவல் தொழில்நுட்பத்தில் டேட்டா பேஸ், சைபர் செக்கியூரிட்டி, இன்டர்நெட் ஆப் திங்ஸ் (ஐ.ஓ.டி.,), டிவைசஸ் அப்ளிகேஷன்ஸ், போன்ற பிரிவுகளை தேர்வு செய்யலாம். இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்புகளில் கணிதம் வராது என்பவர்களும் சேரலாம். டிவைசஸ்கள் தேவை இருக்கும் வரை இதுபோன்ற படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பல லட்சங்களில் சம்பளம் பெறலாம்இந்நிகழ்ச்சியின் பவர்டு பை பங்களிப்பாக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா விஸ்வ வித்யாபீடம் செயல்பட்டன. ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கியது.இந்நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் ஸ்டால்களை அமைத்திருந்தன. அவற்றை பெற்றோர், மாணவர்கள் ஆர்வமாக பார்வையிட்டு கல்வி நிறுவனங்களில் உள்ள வசதிகளை கேட்டறிந்தனர்.