| ADDED : ஜூன் 06, 2024 07:23 PM
குஜிலியம்பாறை:திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா, பாளையம் பொம்மாநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் செத்தக்கம்மாள். இவர் பெயரில் இருந்த 44 சென்ட் நிலத்தை வேறு நபர்கள் பட்டா போட முயன்றனர். செத்தக்கம்மாள் பேத்தி சின்னக்கம்மாள், 2017ல் பழநி ஆர்.டி.ஓ.,விடம் முறையிட்டார். இதை தொடர்ந்து ஆர்.டி.ஓ., தடை உத்தரவு பிறப்பித்தார். அதன் நகல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 2021ல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், அந்த நிலத்தை வேறு நபர்கள் நேற்று பத்திரப்பதிவு செய்ய முயன்றனர். இதை அறிந்த சின்னக்கம்மாள் பத்திரப்பதிவு அலுவலகம் வந்து கேள்வி எழுப்பினார். முறையான பதில் கிடைக்காததால் அவர் தப்பினர் 20க்கும் மேற்பட்டோர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அதே நேரத்தில், குஜிலியம்பாறையை சேர்ந்த வேலுச்சாமிக்கு சொந்தமான 23 சென்ட் நிலத்தில் நான்கில் ஒரு பங்கை வேலுச்சாமி உறவினர் ராஜேஷ் என்பவர் தன் பெயரில் பதிவு செய்தார். இதை அறிந்த வேலுச்சாமி சார் - பதிவாளர் பாலமுருகனிடம் கேள்வி எழுப்பினார். அப்போது ராஜேஷ், வேலுச்சாமி தரப்பினர் மோதிக் கொண்டனர். அலுவலகத்திற்கு வெளியேயும் தாக்கிக் கொண்டனர். குஜிலியம்பாறை பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடாக பல பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு புகார் கொடுத்து பலரும் அலையாய் அலைகின்றனர். முறைகேடான பத்திரப்பதிவுகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.