| ADDED : மே 02, 2024 06:10 AM
பல்வேறு துறைகளில் பெயரளவில் மட்டுமே அதிகாரம் கொண்டவர்களாக பெண்கள் முடக்கப்படும் அவல நிலை நீடிக்கிறது. இதற்கு, உள்ளாட்சித் துறை வெளிப்படையான எடுத்துக்காட்டாக உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் மட்டுமின்றி, ஊரக பிரிவின் மாவட்ட கவுன்சில், ஒன்றிய கவுன்சில், கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளிலும் இந்த ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், மகளிர் வேட்பாளர்கள் தேர்தலில் களமிறக்கப்படுகின்றனர். இருப்பினும் வெற்றி பெற்ற மகளிர் உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில், பெரும்பாலானவை ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதில்லை. பெயரளவில் கையெழுத்து அதிகாரம் மட்டுமே கொண்டவர்களாக, சம்பந்தப்பட்ட பெண்கள் செயல்படுகின்றனர். கணவர், தந்தை, சகோதரர், உறவினர் என, குடும்ப ஆண்களின் நேரடியான தலையீடு வெளிப்படையாக தொடர்கிறது. உள்ளாட்சியில் நல்லாட்சியை செயல்படுத்த, மகளிர் பிரதிநிதிகளின் மேம்படுத்தும் திறன் வெளிப்பட வேண்டும் என, அரசு அறிவுறுத்துகிறது. பல உள்ளாட்சி அமைப்புகளில், தற்போது வரை நிர்வாக செயல்பாடுகள் முழுமையாக ஆண்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. மகளிர் பிரதிநிதிகள் பலர் வெறுமனே போட்டோவிற்கு 'போஸ்' கொடுப்பதற்காக அழைத்து செல்லப்படுவதாக புலம்புகின்றனர். சின்னாளப்பட்டி பேரூராட்சி உள்ளிட்ட இடங்களில் உறவினர் தலையீட்டை கண்டித்து கவுன்சில் கூட்ட வெளிநடப்பு, ரோடு மறியல் போன்ற சம்பவங்கள் இவற்றை வெளிப்படையாக உறுதிப்படுத்துகின்றன. மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.